பாகம் 4" தவத்திரு குன்றக்குடி அடிகளார் -அவர்களின் கதை
இனி எந்த ஓட்டலுக்குள்ளும் நுழையக் கூடாது.சொந்தம் பந்தம் என்று யார் வீட்டுக்கும் போகக் கூடாது.சினிமா நாடகம் பார்க்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார்.
திருநெல்வேலி அருகிலுள்ள பாண தீர்த்தம் பக்கத்தில் காட்டுப் பாதையைக் கடக்கும் போது, ஒரு முரட்டு ஆசாமி வழிமறித்து "ஏண்டா, தடிப்பயலே! உழைத்துச் சாப்பிடாமல் இப்படி சாமியார் வேஷம் போட்டு ஊரையையும் உலகத்தையும் ஏய்த்துப் பிழைக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லை?" , என்று திட்டியதுடன் வாய்க்கு வராத மட்டரக வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்தார்.
நம் பரதேசி கோபப்டாமல் பொறுமையாகவும் ,நிதானமாகவும்,பக்குவமாகவும் தன்னைப் பற்றி எடுத்துரைத்தார்.அந்த முரடனும் மனம் மாறி சாலை வரை நம் பரதேசிக்கு வழித்துணையாக வந்து சென்றான்.
பிறகு திருச்செந்தூர்,கன்னியா குமாரிக்குப் போய் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்தார்.
நம் பரதேசிக்கு சுவாமி விவேகானந்தர் மீது தனி மரியாதை இருந்தது.
முன்பெல்லாம் யாத்திரை மூன்றான்டு காலம் நீடிக்கும். அவர்காலத்திலேயே நவீன போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டதால்,அவரின் யாத்திரை
47 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது.
யாத்திரை சென்ற பிறகு பரதேசி பட்டத்திற்கு அடுத்த கட்டம் தம்பிரான் பட்டமாகும்.அந்த பட்டம் பெற பல வருடங்கள் ஆகும்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக ,யாத்திரைக்கு சென்ற நான்கே மாதங்களில்,நம் பரதேசிக்கு மந்திரக் கஷாயம் கொடுத்து அவரை தம்பிரானாக்கினார் ,மகா சன்னிதனம்.
கந்தசாமி பரதேசியை குறுகிய காலத்தில் தம்பிரானாக உயர்த்தியது ஏற்கனவே இருந்த மற்ற தம்பிரான்களின் மனதில் பொறாமைத் தீயை மூட்டியது.
ஒரு நாள் காலையில் கந்தசாமி தம்பிரான் காவேரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.அப்போது பேச்சு தமிழாசிரியர் சுந்தரம் பிள்ளைப் பற்றித் திரும்பியது.
"படித்தால் பொருள் விளங்கிப் படிக்க வேண்டும்.இல்லையேல், படித்து என்ன பயன்?குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டாமா?" , என்று கந்தசாமித் தம்பிரான் சொன்னதை...
பொறாமைப் பேய் பிடித்த மற்ற தம்பிரான்கள் கண்,காது,மூக்கு வைத்து கதையை வேறு விதமாக மாற்றி மகா சன்னிதானத்திடம் பற்ற வைத்துவிட்டார்கள்.
விளைவு?
கந்தசாமி பார்த்து வந்த எல்லா வேலைகளும் மற்றத் தம்பிரான்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.அவர் தங்கியிருந்த அறை காலி செய்யப்பட்டு வாழைக்காய்களைக் கனிய வைக்கப் பயன்படும் அறைக்கு மாற்றப்பட்டார்.
மனம் கலங்க வில்லை.தமிழ் இலக்கியத்திற்குள் தன்னைக் கரைத்துக் கொண்டார். தமிழ்க் கற்றவனை தனிமை என்ன செய்து விடும்?
நெருப்பை நிமிர்ந்து தானே எரியும்?
அவருக்குப் பிடித்தமான பொருள்களை, நம் தம்பிரான் மேல் பற்று வைத்திருக்கும் மற்ற தம்பிரான்கள்,நள்ளிரவில் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்.
ஒரு நாள் இரவு மகா சன்னிதானம், நம் தம்பிரானை கூப்பிட்டு
"நீ நல்ல பிள்ளை என்றைக்கும் நன்றாகத் தான் இருப்பாய்!" , என்று திரு நீறு வழங்கி ஆசிர்வாதித்தார்.
மகா சன்னிதானத்தின் மனம் பழுத்ததால் .வாழைக்காய் பழுக்க வைக்கும் அறையிலிருந்த நம் தம்பிரான் பழைய அறைக்கு மாற்றப்பட்டார்.பழைய தடைகளும் தகர்ந்தன.
தருமபுர ஆதினத்தில் ஆவணி மூலத் திருநாளை முன்னிட்டு , ஒரு பட்டிமன்றம் நடத்தப் பட்டது.அதுதான் நம் அடிகளாரின் முதல் பட்டிமன்றப் பேச்சு. அந்த மேடைத் தமிழ்தான் தன்னை பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்பதை அவர் அப்போது நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.
"தருமிக்கு பொற்கிழி வழங்கிய வரலாற்றில் தவறு செய்தவர் யார்...நக்கீரரா... இல்லை சிவபிரானா...?" , என்பது தான் அந்த பட்டிமன்றத் தலைப்பு.
"தருமிக்கு சிவபெருமான் பினாமியாக கவிதை எழுதிக்கொடுத்தது.தமிழ்ச் சங்கத்தில் கருத்துடன் தான் மோதவேண்டுமே தவிர,நெற்றிக் கண்ணைக் காட்டி சிவ பெருமான் மிரட்டலாமா,இது வன்முறை வழியில் தன் கருத்தை ஏற்க செய்யும் செயலாகாதா, இது நல்ல மரபாகுமா?
எனவே இப்படித் தவறுகளை சிவபெருமான் செய்திருக்க மாட்டார்.இது திருவிளையாடல் புராணம் பாடிய புலவர் சிவனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் செய்த தவறு" , என்று நம் தம்பிரான் புதுக்கருத்துடன் அழகாக வாதிட்டார்.
...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்.... _ஆதிசிவம்,சென்னை.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்-பாகம் 4
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com