பாகம் 5 " தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை
சிவ பெருமானின் தவறே என்ற தலைப்பில் வாதிட்ட தம்பிரானின் கருத்தால், "அட! இவன் கடவுளையே குற்றம் சொல்லுகிறானே!" என்று கருதியதால் பழமைக் கருத்தில் ஊறிப் போனர்களிடையே ,இந்தப் பேச்சு சலசலப்பை உண்டாக்கியது.
இந்த பரபரப்புக்குப் பிறகு தருமபுர ஆதீனத்தில் இனி எப்போதும் பட்டிமன்றமே நடத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்ற இந்த சம்பவமே காரணமானது.
சுதந்திர போராட்ட வீரர்கள் என்பதால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகிய தலைவர்களை கடவுளுக்கு அடுத்த வரிசையில் போற்றி வந்தார்.அதனால் காங்கிரசு கட்சி மீது தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு கோரி நம் பச்சைத் தமிழன் காமராஜர் வருவதைக் கேள்விப் பட்டு நம் தம்பிரான் திருக்கோவில் பிரசாதம் வழங்கி வரவேற்றார்.
முன்பெல்லாம் கட்சிகளுக்கு சின்னங்கள் எல்லாம் ஒதுக்கப்பட வில்லை. வண்ண வண்ண வாக்கு பெட்டிகள் தான் வைக்கப் பட்டிருக்கும்.
காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி ஒதுக்கப் பட்டிருந்தது.
திருப்பூர் குமரன்,பகத்சிங்,லாலா லஜபதிராய் போன்ற தியாகிகள் சிந்திய சிவப்புக்கறை, இது. அந்த தியாகிகள் நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள் என்று வித்தியாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் நம் அடிகளாரின் பேச்சை நம் காமராஜர் ஆர்வமாக கவனித்தார்.அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகாலம் வரை (1967 பொதுத் தேர்தல் வரை) காமராஜர் நம் அடிகளாருடன் நெருங்கிப் பழகினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் எதுகை மோனை அடுக்கு மொழி காந்த நடையில் வந்த திராவிட நாடு பத்திரிக்கை நம் அடிகளாரையும் கவர்ந்தது. வாரந்தோறும் ஆவலுடன் வாங்கிப் படிப்பார்.
படிப்பதோடு சும்மா இருப்பதில்லை.அண்ணா எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலுக்கு மறுப்புக் கட்டுரைகள் எழுதவும் தயங்க மாட்டார்.
அரிஜன ஆலய பிரவேசத்தை சேக்கிழார் ஆதரித்தார்.சாதிப் பிரிவுகளை வளர்க்க நினைக்கவில்லை என்று எழுதிய அவரின் கட்டுரை தார்மீக இந்து என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது.அதன் பிறகும் அவர் கட்டுரைகள் அந்த இதழில் அடிக்கடி வெளி வந்தது.
ஒருநாள் திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் அண்ணாத்துரை பேசப் போகிறார் என்பதைக் கேள்விப் பட்டு அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வம் கொண்டார்.
கடவுள் கொள்கையை மறுக்கும் அண்ணாவின் பொதுக் கூட்டத்திற்கு நம் போனால் சிக்கலாகுமே என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
சாயம் போன காவி உடையைத் தேடிப் பிடித்து உடுத்திக் கொண்டு , வை.சு.தண்டபானி என்ற நண்பருடன் சென்று மக்கள் கூட்டம் இல்லா மறுகோடியில் நின்று கொண்டு ஒலிபெருக்கியின் வழியாக அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்டார்.
அண்ணாவின் உருவம் தெளிவாகத் தெரிய வில்லை. மேடையில் நின்று கையை உயர்த்தி அசைத்தது மட்டும் தெரிந்தது.
தமிழ் ஆர்வம் மிக்க அந்த ஆதீனத்தில்,கந்தசாமி தம்பிரானின் தமிழ்க் கல்வியும் தங்குதடையின்றி தொடர்ந்தது.
தமிழ்க் கல்லூரியில் நம் தம்பிரான் பயின்றபோது,அவரின் ஆசிரியர்களில் ஒருவரான வஜ்ரவேலு முதலியார் அவர்கள் சைவ சமயம் பற்றி இலக்கிய சுவையுடன் பாடம் நடத்தியது, நம் தம்பிரானின் மனதைக் கவர்ந்தது.
ஒருநாள் அந்த ஆசிரியரை நம் தம்பிரான் தன் அறைக்கு அழைத்து வந்து அவருடன் அமர்ந்து உணவருந்திணார்.
கல்லூரியில் ஆசிரியர்தான் உயர்ந்தவர்.ஆனால் திருமடத்தில் ஆசிரியரை விட தம்பிரானே உயர்ந்தவர் என்பதால்.மற்றவர்களுக்குச் சமமாக அமர்ந்து அவர் உணவு உண்ணக் கூடாது.மடாலய ஆசாரப்படி அது குற்றம்.
அதற்கு பரிகாரமாக கந்தசாமி தம்பிரான் பஞ்சகவுமியம் சாப்பிட வேண்டும் என்ற
தண்டனை விதிக்கப்பட்டது.(பால்,மோர்,நெய் ஆகியவற்றுடன் கொஞ்சம் மாட்டு மூத்திரம்,மாட்டுச் சாணமும் கலந்து தயாரிக்கப் படுவது பஞ்ச கவுமியம்)
ஒரு முறை சீகாழி கோவிலில் ஆய்வுப் பணி மேற்கொண்டபோது, ஓர் உட்கோவில் இருப்பதை கண்டார்.அதன் சுவர்களிலும்,கோபுரத்திலும் செடிகளும் கொடிகளும்,ஆசையாக படர்ந்து கிடந்ததன, இது என்ன கோவில் என்று விசாரித்தார்.அந்த கோவிலின் சாவியை வாங்கி திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி!
பசுக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.ஒருபுறம் வைக்கோல் போர்,மறுபுறம் சாணத்தால் ஆன மலை.இன்னொரு மூலையில் ஒன்றுக்கும் உதவாத தட்டுமுட்டுச் சாமான்களின் குவியல்.
பசுக்களை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லியும், அந்த பொருட்களை அப்புறப் படுத்த சொல்லியும்,அந்த ஞானசம்பந்தரின் கோவில் இனி எப்போதும் வழிபாட்டிற்காக திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்.... _ஆதிசிவம்,சென்னை.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்-அவர்களின் கதை-பாகம் 5
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com