பாகம் 8 " தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை
இதை எல்லாம் கேள்விப்பட்டு தருமபுர ஆதீனத்திலிருந்து ஒருவர் வந்து அடிகளாரிடம் விபரம் கேட்டார்.அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்று அழுத்தமாகச் சொல்லி,அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
சில நாட்கள் கழிந்தன....
ஒரு நாள் மகா சன்னிதானமும் நம் அடிகளாரும் வேறு யாரும் இல்லாத சமயத்தில்,"சுவாமிகளுக்கு நான் ஏதேனும் தவறு செய்தேனா?", என்று வினவினார்.
வேள்வித் தீயைப் போல் வெகுண்டு எழுந்த சன்னிதானம்," அதிகாரத்தைப் பறிக்க நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்...நான் இறப்பதற்கு மந்திரம் செபிக்கிறீர்கள்," எனக் குமுறினார்.
உடனே நெடுஞ்சாண் கிடையாக சன்னிதானம் முன் தரையில் விழுந்து ,"எனக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது. அப்படி கோள் மூட்டியிருக்கிறார்கள்.சன்னிதானம் உண்மை தெளிய வேண்டும்," என்றார்.
அதன் பிறகு மகாசன்னிதானம்,சில ஊழியர்களை தனித் தனியே வரவழைத்து அடிகளார் முன் அவர்களை விசாரித்தார்.எல்லோரும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றார்களே தவிர, குற்றச்சாட்டை யாரும் நிரூபிக்க முடியவில்லை.
எனவே தன்னிடம் கோள் சொன்ன இரண்டு ஊழியர்களை,சன்னிதானம் வேலை நீக்கம் செய்தார்.அடிகளார் அவர்கள் மீது அனுதாபங் கொண்டு, மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டினார்.சன்னிதானமும் அதற்கு இசைந்தார்.
ஒரு நாள், குன்றக்குடி கீழ்க் கோவிலில் பழைய பாத்திரங்களை விற்க எடை போட்டுக் கொண்டிருப்பதை அறிந்து அடிகளார் ஓட்டமும் நடையுமாக அங்கு விரைந்து போய் இவைகளையெல்லாம் விற்க முடியாது என்று கடுமையாக பேசி பாத்திரங்களை அறைக்குள் தள்ளிக் கதவை இழுத்துப் பூட்டினார்.
இந்த விபரம் கேள்விப்பட்ட சன்னிதானம் நேரில் சென்று விலை பேசி நிறுக்கப்பட்ட பாத்திரங்களைப் பார்வையிட்டார்.
அத்தனையும் புத்தம்புது பாத்திரங்கள்!இவை அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத பழைய பாத்திரங்கள் என்றார்களே என்று வியப்படைந்து அவற்றை விற்க முயன்ற ஊழியர்களை கடுமையாகக் கண்டித்தார்.
ஏற்கனவே வயோதிகராக இருந்து வந்த மகா சன்னிதானம் 1951 ஜீன் மாதத்தில் உடல் நலம் குன்றினார்.அவரை 85 ஆண்டுகளுக்கு முன் உருவான புகழ் பெற்ற மருத்துவ மனையான சுவீடிஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஒருநாள் இரவு சன்னிதானம் மயக்கமடைந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கேள்விபட்டு மருத்துவமனைக்கு அடிகளார் விரைந்தார்.
"மயக்கம் தெளிந்த மகாசன்னிதானம் எப்படி வந்தீர்கள்?," என்று விசாரித்தார்.
"மிதிவண்டியில்...", என்றார்,அடிகளாரோடு வந்த நடேசன்.
"காரை எடுத்துக் கொண்டு போங்கள்...அது இனி குன்றக்குடியிலேயே இருக்கட்டும்.பிரசங்கம் செய்வதற்கு அதில் போக வேண்டாம்.அநாவசியமாக அதைப் பயன்படுத்த வேண்டாம்", என்றெல்லாம் சன்னிதானம் உத்தரவிட்டார்.
ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் சன்னிதானம் குணமடைய வில்லை.எனவே குன்றக்குடி மடாலயத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
1952 ஜீன் மாதத்தில் சேலம் நகரில் திருக்குறள் கழகப் பொன் விழாவில் கலந்து கொள்ளமாறு அடிகளாரையும் அழைத்திருந்தனர்.
இந்த நிலையில் அவரை விட்டு விட்டு அவ்வளவு தூரம் செல்வதா, திரும்பி வருவதற்குள் ஏதேனும் ஆகிவிட்டால்...?
சன்னிதானத்தின் காதில் கார் ஒலி கேட்காமல்,நகர்த்திய பிறகு அடிகளார் அதில் அமர்ந்து கொள்ள கார் சேலம் நோக்கி வேகம் பிடித்தது.
மூன்று மணி நேரம் பேசி முடித்த பின்பு டிரைவர் பிச்சைராவ் மிக விரைவாகவும்,திறமையாகவும் ஒட்ட... அதிகாலையில் வந்து சேர்ந்தார்கள்.
அடிகளார் காரை விட்டு இறங்கியதும் சன்னிதானத்தின் அறைக்குள் விரைந்து சென்று பார்த்தார்.அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.தன்னை பற்றி அவர் எதுவும் விசாரிக்க வில்லை என்பதை அறிந்து மன நிம்மதி உண்டானது.
கொஞ்ச நேரத்திலேயே சன்னிதானம் அழைப்பதாக கூற ,அடிகளார் விரைந்து போனார்.
சன்னிதானம் வலது கையை உயர்த்தி ஆசிர்வதித்து," நமது மடம் மிகவும் கஷ்டப்பட்டது.இதை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.சிக்கனமாகச் செயலாற்றுங்கள்,"என்று கூறிய பிறகு ஓராண்டு காலம் மரணத்தோடு போராடிய மகா சன்னிதானம் அடுத்த சில நிமிடங்களில் அமரர் ஆனார்.
எனவே 1952 ஜீன் 26ஆம் தேதி குன்றக்குடியில்ஆதீனத்தின் 45 ஆவது குரு மகாசன்னிதானமாக "அருள் திரு. தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற பெயர் மாற்றத் தோடு நம் அடிகளார் பதவியேற்றார்.அப்போது அவருக்கு வயது 27 தான்.
நம் அடிகளார் பிறப்பதற்கு முன்பே குனறக்குடி மடாலயத்தில்,சுமார் 35 வருட காலம் நேர்மையாக பணி செய்த சுப்ரமணிய தேசிகருக்கு 65 வயதாகி விட்டது.
அந்த பழைய தம்பிரான் மீது பரிவும் இரக்கமும் உண்டானது.தன் தந்தைக்குச் சமமான வயதுள்ள சுப்ரமணிய தேசிகரை தமது வாரிசாக நியமித்தார்.
இளைய சன்னிதானமாகிய அந்த முதியவர்,முதன் முதலாக ஆதீனத்தின் காரில் ஏறி அமர்ந்தவுடன் , அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அளவிட முடியாது.அந்த மகிழ்ச்சியால் நம் அடிகளாரை அவர் மனமார வாழ்த்தினார்!
வட்டிக் கடைக்காரர்களிடம் இருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டன.
திருக்கோளக்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நஞ்சை,புஞ்சை நிலங்கள் எல்லாம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன.
பள்ளப்பட்டி,கிருங்காக் கோட்டையில் குத்தகைக்கு விடப் பட்டிருந்த புஞ்சை நிலங்கள் மீட்கப் பட்டு ஏராளமான தென்னை,மா,புளி மரங்கள் வளர்க்கப் பெற்றன.
திருநெல்வேலி,பாளையங்கோட்டை,மதுரையில் இருந்த கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு,காலி இடங்கள் வீடுகளும் கடைகளுமாக தலை நிமிர்ந்தன.வாடகைப் பணம் போன்றவற்றால் ஆதீன வருமானம் பெருகியது.
சன்னிதானமாக பதிவியேற்ற நம் அடிகளாரை பாராட்ட ,மயிலாடுதுறையில் மகேஸ்வர பூஜை நடத்தப் பெற்றது.
உண்பதற்கு தனியாக இலை போடப் பட்டதைக் கண்ட அடிகளார்,"தொண்டர்களுக்கு இலை போட வில்லையா?", என்று கேட்டார்.
"அவர்களுக்கு வேறு இடத்தில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்",
என்று விழா நடத்தியவர்கள் பதில் அளித்தார்.
(தொண்டர்கள் பல்வேறு சாதியினராக இருந்ததால் இப்படிச் செய்யப்பட்டது ).
"தொண்டர்களுக்கு இல்லாத விருந்து எனக்கும் வேண்டாம்", என்று அடிகளார் சாப்பிடாமல் எழுந்து விட்டார்.
விழா நடத்தியவர்களுக்கோ அதிர்ச்சி!
அதன் பிறகு அடிகளாருடன் சேர்ந்துண்ணும் வாய்ப்பு தொண்டர்களுக்கும் கிடைத்தது.
அரிஜனங்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி அருந்திய ஒரே சன்னிதானம்,நம் அடிகளார்தான்!
...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்.... _ஆதிசிவம்,சென்னை.
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 8
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com