(என் மொபைல் திரையில் பூத்தப் பூ!)
புரண்டு படுத்தால்
நாம் இறந்து போவோம்!
என்று
கருவில் இருந்தே
நமக்காக
தூக்கத்தைக் கூட
தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த சூரியன்..."நம் அம்மா!"பாகம் 7"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
கொச்சியை விட்டுச் சென்ற செண்பகராமன், ரத்தின வியாபாரியைப் போல தலையில் பெரிய முண்டாசு தலைப்பாகை,பேண்ட்,கோட்டுடன் கள்ளிக்கோட்டைக்குச் சென்றார்.மன்னர் ஜாமரீனை சந்திக்க விரும்பினார்.
ஆனால் அங்கு மன்னரின் ஆட்கள் அவரை அவ்வளவு எளிதில் சந்திக்க அனுமதிக்க வில்லை.அவர்களுக்குள் சிறிது நேரம் வாக்கு வாதங்கள் கூட நடந்தன.
சிறிது நேரம் யோசித்த பிறகு ஒரு கடிதம் எழுதி ,அதில் ரகசியக் குறியிட்டு,அந்த கடிதத்தை மன்னரிடம் கொடுக்கச் சொன்னார்,நம் செண்பகராமன்!
மன்னர் ஜாமரீனுக்கும், ஜெர்மனிய இந்தியத் தீவிரவாதிகளுக்கும் இடையே நெருங்கியத் தொடர்பு இருந்ததால்,
உடனே ஜாமரீன் மன்னரைப் பார்க்க அனுமதி வழங்கப் பட்டது.மன்னர் மூலம் ஆங்கிலேயர்களின் கொடுமைகளை மேலும் விவரமாகத் தெரிந்து கொண்டார்,செண்பகராமன்.
பின்பு பம்பாய் சென்று,அங்கிருந்து மேற்கு அய்ரோப்பிய நாடுகள் வழியாகச் செல்லும் கப்பலில் மாறுவேடத்தில் ஜெர்மனிக்கு பயணமானார்.
ஜெர்மனிக்கு கிளம்பி வருவதை முன்கூட்டியே ஜெர்மன் நாட்டு யுத்த கேந்திரத்திற்கு தகவல் அனுப்பினார்.
ஜெர்மன் நாட்டு கடற்கரையில் கடற்படை இராணுவ உடையிலேயே கம்பீரமாகத் தோன்றினார், நம் செண்பகராமன்.
ஜெர்மன் போர்ப்படை ,தன் நாட்டு இராணுவ மரியாதை கீதங்களை ஒலிக்கச் செய்து மகிழ்ச்சியுடன் வரவேற்றது!
அடுத்து தலைநகர் பெர்லினில் இருக்கும் மன்னர் கெய்சரை சந்தித்தார்.அவரும் செண்பகராமனைப் பாராட்டி தனிப்பட்ட முறையில் பல உயர்ந்த பரிசுகளை அளிப்பதாக தெரிவித்தார்.
"மேன்மை தாங்கிய மன்னர் அவர்களே! உங்கள் பரிசுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!நீங்கள் அளிக்கப் போகும் அந்த பரிசுகள் எனக்கு வேண்டாம்!" என்றார்,செண்பகராமன்.
இதைக் கேட்ட இதர அதிகாரிகள் மன்னர் கெய்சர் வருத்தப் படுவாரே என்றெண்ணி செண்பகராமன் மீது சற்றே கோபம் கொண்டார்கள்.
"நான் போரில் நிகழ்த்திய செயல்கள் யாவும் என் இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தான்!ஆனால் இந்த ஜெர்மன் நாட்டிற்காக நான் ஒன்றுமே செய்யவில்லையே!என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்றார்",நம் செண்பகராமன்.
"என் வீர இளேஞனே! உன் இந்தியா விரைவிலேயே விடுதலை அடையும் வாழ்த்துக்கள்!"என்றார் மன்னர்,அந்த மகிழ்ச்சி அங்கிருந்த எல்லோரையும் பற்றிக் கொண்டது.
இதற்கிடையில்...
சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன செண்பகராமன் தான் எம்டன் கப்பலில் ஏறி குண்டு போட்டவர் என்ற உண்மையை அறிந்தது,எம்டனில் இருக்கும் செண்பகராமனைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டிஷ் மேலதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பறந்தது.
செண்பகராமனின் திருவனந்தபுர வீட்டையும் போலீஸ் புலிகள் புகுந்து சோதனையிட்டன. ஒன்றும் கிடைக்க வில்லை!
இதற்கிடையில் இந்துமகாக் கடலின் தெற்கே கோக்கஸ் தீவில் எம்டன் கப்பல் ஆஸ்திரேலியாவின் ஸிட்னி கப்பலிடம் சரண் அடைந்த விஷயம் பிரிட்டிஷாருக்கு எட்டியது.ஆனால் கப்பலிருந்து கைது செய்தவர்களின் பட்டியலில் செண்பகராமனின் பெயர்
இல்லை.
பிரிட்டிஷ் போலீஸ் புலிகளுக்கு மண்டை காய்ந்தது!
எம்டன் புதுவையில் நின்ற செய்தி அறிந்து,புதுவை பிரெஞ்சு அரசு உதவியுடன்,புதுவை இந்தியத் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடங்களையெல்லாம் பிரிட்டிஷ் போலீஸ் சோதனை இட்டது.
இதற்கிடையில் எம்டன் கப்பலில் இருந்து இறங்கிய ஓர் இளைஞன் மீனவர்களை சந்தித்துப் பேசிய இரகசியத் துப்பு கிடைத்தது.அம்மீனவர்களை விசாரித்துப் பார்த்தார்கள்.அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது எனத் தட்டிக் கழித்தனர்.
ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷார் செண்பகராமனை உயிருடனோ அல்லது பிணமாகவே கொண்டு வருபவர்களுக்கு உயர்ந்த தொகை வெகுமதியாக வழங்கப் படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது!
இந்த அறிவிப்பைக் கேட்டு ஆண்களை மயக்குவதில் கில்லாடியான இளம் நங்கை மதாஹரி என்பவள் துள்ளி எழுந்தாள்.
எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசும் ஒய்யாரி!மேல் நாட்டு இசைக்கேற்ப அரைகுறை ஆடைகளில் ஆடி பல மேல்நாட்டு தனவந்தர்களை தன் அடிமையாக்கியவள்.பிரிட்டிஷாரின் பேராதரவு பெற்ற இவள் ஒரு வேவுக்காரியாகவும் செயல்பட்டாள்.
இந்த பேராசைக்கார சாகசக்காரி ஜெர்மனியில் தங்கியிருக்கும் செண்பகராமனைத் தேடிச் சென்றாள்.
செண்பகராமன் ஓர் ஆடம்பரமான கிளப்பில் இருப்பதைக் கேள்விப்பட்டு செல்வ சீமாட்டியைப் போல நவநாகரீக ஆடை அணிந்து ,செண்பகராமன் முன்னால் அமர்ந்து தன் மோகப் பார்வையை செண்பகராமனின் மேல் அள்ளி வீசினாள்!
கிளப்பில் இருந்த மற்றவர்கள்,அந்த வேற்றுநாட்டு அரசிளங்குமரி தன்னை வந்து தீண்டமாட்டளா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்!
ஆனால் செண்பகராமனோ வெறுப்புப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு கையில் மதுக் கிண்ணத்தையும், மறுகையால் செண்பகராமனின் கையையும் கோர்த்துக் கொண்டு,அங்கு ஒலித்த மேல்நாட்டு இசைக்கேற்ப உடலை வளைத்து நெளித்து அவரை மயக்க முயற்சித்தாள்!
தீவிர பிரம்மச்சாரியான செண்பகராமன் அவள் மீது கடுங்கோபப் பார்வை வீசிப் பார்த்தார்.
அந்த மாயக்காரி விடுவதாக இல்லை.மாயக்காரியான மதாஹரி சில வாலிபர்களிடம் மட்டும் கண்களை சிமிட்டி ஏதேதோ இரகசிய செய்திகளை பரிமாறிக் கொள்வதை செண்பகராமன் பார்த்துவிட்டார்.அவர்கள் அனைவரும் அவளைச் சேர்ந்த ஆட்கள்! இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை வெகு எளிதாக கண்டுபிடித்து விட்டார்!
திடீரென்று மதாஹரிக்கு இணையாக ஆடினார். செண்பகராமனின் இந்த திடீர் போக்கை வாய் பிளந்து எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்து கொண்டிருக்கும் போதே,பாதி நடனத்தில் திடீரென்று அவளது பிடியை உதறிவிட்டு ,அங்கிருந்த அறைக்குள் வேகமாகச் சென்று மறைந்து போனார்,செண்பகராமன்.
நீண்டநேரமாகியும் அந்த அறையிலிருந்து செண்பகராமன் வெளியே வராமலிருக்கவே, சந்தேகப்பட்ட மாயக்காரி அந்த அறைக்குள் சென்று தேடினாள்.
அது சமயலறை. செண்பகராமன் அங்கு நுழைந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அங்கிருந்த சமையல்காரர்களும் வியப்படைந்தார்கள்.அப்படி ஒரு புது நபரை யாரும் பார்க்கவே இல்லை என்றார்கள்.
மாயக்காரி மதாஹரிக்கு முன்னால் மாயமானது எப்படி?
அந்த அறைக்குள் நுழைந்த செண்பகராமன் எவருக்குமே தெரியாமல் சில நொடிகளில் அங்கிருந்த உடைகள் மற்றும் விசேஷத் தலைப்பாகைகளை தனக்கு மாற்றிக் கொண்டு, கையில் சர்வரைப் போல வெளியேறிய இரகசியம் யாருக்கும் தெரியாது!
பிரிட்டிஷ் துப்பறியும் இலாகாவும்,ஸ்காட்லாந்து யார்டும் செண்பகராமனைப் பிடிக்க படுத் தீவிரமாக அலைந்தன.
1914 ஆகஸ்டில் தொடங்கிய உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதாரவாக இந்தியர்கள் போரிட்டு உயிர் விட்ட செய்தியும், பலத்த காயங்களுடன் குற்றுயிராகக் கிடந்த மீதி இந்தியர்களைப் பார்க்க வந்த பிரிட்டிஷ் மன்னர் அய்ந்தாம் ஜார்ஜ் தனது பட்டத்து ராணியுடன் பார்வையிட்டு அனுதாபமாக பேசியதைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியர்கள் நம் அடிமைகள், அவர்களுக்கு நாம் கருணை காட்ட
தேவையில்லை. கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள் என்று அவமானப் படுத்தி அசிங்கப் படுத்திய செய்தீ ஜெர்மனியில் இருந்த செண்பகராமனையும் எட்டிச் சுட்டது!
இந்திய ராணுவ வீரர்களுக்கு நெருப்புக் கங்கு செய்தியை அனுப்பி வைத்தார்.
"ஹிந்து வீரர்களே! பஞ்சாப் சிங்கங்களே!நீங்கள் அடிமையாக இருப்பதற்கு வெட்கப் படவேண்டாமா? உங்கள் சொந்த சகோதரன் தூக்கில் தொங்குகிறான்!....."
முழக்கம் உயரும்..._ஆதிசிவம்,சென்னை.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 7
வணக்கம். என்பெயர் பார்த்திபன். எனக்கு செண்பகராமன் என்றால் யார் என்றே தெரியாது. ஆனால் ஒருநாள் மக்கள் தொலைக்காட்சி-இல் சங்கப்பலகை என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். மாபெரும் வீரன் என்பதை உணர்ந்தேன். என்னுடைய கேட்ட நேரம் அந்த நிகழ்ச்சியை பாதி தான் கேட்க முடிந்தது. எனக்கு அவரின் முழு வரலாறு தெரிவிக்க முடியுமா. என் மின்னஞ்சல் buduparthee@live.com இதற்கு தயவு செய்து அனுப்பி வையுங்கள்.
ReplyDeleteஎன் இணையதள முகவரி www.partchil.blogspot.com. நன்றி