பாகம் 1 "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
நம் இந்திய அன்னையை பிரிட்டிஷ் அரசு தன் ஆட்சியின் கீழ் அடிமை இந்தியாவாக மாற்றி இருந்த சமயம்...
1914 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்ட கடும் போர், முதல் உலகப் போராக வெடித்தது!
இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பிரிட்டன் படையைக் குறி வைத்து, "எம்டன்" என்ற ஜெர்மானிய போர்க் கப்பல்...
1914 செப்டம்பர் 10 ந்தேதி,வங்கக் கடலில் கல்கத்தாவிற்கு அருகே, ஆறு பிரிட்டன் கப்பல்களை மோதி மூழ்கடித்த நெருப்புச் செய்தி ,திசை எங்கும் தீயாய் பரவிய பிறகு தான் எம்டன் கப்பலின் பலம் பற்றி எல்லோருக்கும் தெரிந்தது!
அந்த எம்டன் கப்பல் தான்,அந்த அந்த இடத்திற்கு தக்கபடி,அந்த அந்த நாட்டு கொடியை பறக்க விட்டு, அந்த அந்த நாட்டிலேயே ,தனக்கு வேண்டிய எரி பொருள்கள்,பழுதுகளைப் பார்ப்பது,தன் படை வீரர்களுக்கு தேவையான உணவு போன்ற மற்ற பொருள்களைப் பெறுவது,எந்த நாட்டில் கப்பல் ஒதுங்குகிறதோ ,அந்த நாட்டு மொழியையே பேசி அசத்தும் சாமர்த்தியம்,எதிரிக் கப்பல்களை திடீர் திடீரென்று தாக்கி விட்டு,கடலுக்குள் மூழ்கி மறைந்து போகும் எம்டன் கப்பல் என்றால் அது "எமனே" ஏறி வரும் கப்பல் என்று எதிரிப் படைகள் அஞ்சி நடு நடுங்கிப் போகும்!
அந்த கப்பல் தான்...
1914 செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை துறைமுக கடலில் இருந்து கண்கள் பறிக்கும் "சர்ச்" லைட் டின் ஒளியை எல்லா திசைகளிலும் வீசியடித்து,இலக்குகளைக் குறிவைத்து தாக்கியது.
"ஸூப்ரா" என்ற பிரிட்டிஷ் கப்பல்,பர்மாஷெல் ஆயில் டாங்குகள்,சென்னை உயர்நீதிமன்றம் வெளி சுற்றுச் சுவரின் மீதும் காதைக் கிழிக்கும் இடியோசையோடு வெடித்த போது,எழுந்த கறுப்புப் புகை வானத்தையே மறைத்ததது.மொத்தம் 25 குண்டுகள் முழங்கிய பின்புதான்
பிரிட்டிஷ் கடற்படையினர் தங்களது சர்ச் லைட் ஒளியின் வெளிச்சத்தில் எம்டனைக்
கண்டுபிடித்து,தங்களது பீரங்கிகளைக் கொண்டு திருப்பிச் சுட்டது...
எம்டனை அல்ல,அது நின்ற அலைகளை...!
எம்டன் அலைகளுக்குள் சென்று மறைந்து விட்டது.
"குய்யோ முறையோ" எனக் கூக்குரலுடன் இரண்டு,மூன்று தினங்களில் ஏராளமான சென்னை மக்கள் வெளியூர்களுக்கு செல்ல தயாரானர்கள். பேருந்து ,தொடர் வண்டி நிலையங்களில் கூட்டம் நிரம்பி ,பிதுங்கியது, வழிந்தது...
இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பக்கம்,சூரியன் மறைந்து இயற்கை கவிதை எழுதும் மாலை நேரம்...
ஒரு மனிதர் ,அந்த மங்கிய வெளிச்சத்தில்...
அக்கடற்கரை மணலில் மண்டியிட்டு,மணல் தரையை முத்தமிட்டு,அதனைத் தனது இரு கைகளால் ஒற்றிய பின், அதிலிருந்து சிறிதளவு மணலை எடுத்துத் தமது நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டார்.
சற்றுத் தூரத்தில் இரு மீனவர்கள் தனது செயலைக் கூர்ந்து கவனிப்பதை அறிந்து ,உடனே தம்மை நோக்கி வரும்படி அழைத்தார்.
தயங்கித் தயங்கி வந்த இருவரையும் நோக்கி சந்தோஷ கூச்சலிட்ட அந்த மனிதனைப் பார்த்து மிரண்ட இருவரும் பயந்து பின்னோக்கி ஓடுவதற்கு தயாரானார்கள்.
உடனே துரத்தி வந்த மனிதரோ, "என் அருமை சகோதரர்களே! ஓடாதீர்கள்!நில்லுங்கள்!" என்ற அந்த தமிழ் பேச்சுக் கேட்டு சிலையாக நின்றார்கள்.
தன்னருகில் வந்த அந்த இருவரையும் கட்டித் தழுவினார்.உடனே அவர்கள்,"உங்களை யாரென்று தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டனர்.
"நம் பாரத மாதா பெற்ற பிள்ளைகளில் நானும் ஒருத்தன்.உங்களில் ஒருவன்" ,என்றார்.
"வியப்பாகவே இருக்கிறது!அப்படியானால் நீங்கள் யார்?" என்றார்கள்,ஆர்வம் தாங்காமல்...
"இந்த திருவனந்தபுரம் தான்,நான் பிறந்த மண்!" என்றுக் கூறி ஒரு பிடி மணலை எடுத்துத் தனது கண்களில் ஒற்றிக் கொண்டார்.
"என் பெயர் செண்பகராமன் பிள்ளை!"
"செண்பகராமன்பிள்ளையா?...இந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கு எதிரியாகி,எங்கேயோ வெளி தேசத்தில் தலைமறைவாகிவிட்டதாகக் கூறும் அந்த செண்பகராமன் பிள்ளையா ,நீங்கள்?...
"
"ஆம்!.."
"அப்படியானால் இதுவரையில் எங்கிருந்தீர்கள்?"
"ஜெர்மனி...!"
"அது பிரிட்டிஷ்காரரின் எதிரி நாடாயிற்றே! அங்கிருந்து எப்படி இந்தியாவுக்கு வந்தீர்கள்?"
"எம்டன் கப்பலில்... ."
"சென்ற வாரம் மெட்ராசையே குண்டுகளை வீசியழித்த எம்டன் கப்பலிலா? என்றபடி அய்யோ ஆபத்து வந்து விட்டது!"என்று அந்த இருவரும் ஆளுக்கொரு திசையில் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
"என் சகோதரர்களே ,ஓடாதீர்கள் நில்லுங்கள்!" என்று உரத்தக் குரலில் கத்தினார்.
"அய்யா நீங்களோ பிரிட்டிஷாருக்கு ஜென்ம விரோதி.உங்களையோ,உங்கள் தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரொக்கப் பரிசு தருவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் உங்களிடம் பேசுவதை யாராவது பார்த்தால்,எங்கள் தலைகளுக்குமல்லவா ஆபத்து!"
"என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.என்னை இப்போதே அந்த வெள்ளையர்கள் முன்னால் நிறுத்தி,அவர்கள் அறிவித்துள்ள அந்த ரொக்கப் பரிசு பெற்றுக் கொள்ளுங்கள்". என்றார்.
சிறிது நேரம் அமைதியாகவும்,மவுனமாகவும் இருந்த அம்மீனவர்கள்...
"எங்களை சந்தித்தது முதல் அன்புச் சகோதரர்களே என்றே அழைத்து வருகிறீர்கள்,உங்கள் உடம்பில் ஓடும் அதே இந்திய ரத்தம் தானே எங்கள் உடம்பிலும் ஓடுகிறது?உங்களைக் காட்டிக் கொடுக்க மனம் துணிவோமா? "என்றார்கள்,அன்பொழுக...
"உங்களுக்குள் எரியும் இந்த சுதந்திரத் தீ!,அத்தனை பேர்களின் உள்ளங்களிலும் எரிந்தால்,வெகு சீக்கிரத்திலேயே விடுதலை நிச்சயம்!",என்றார் .
"அய்யா! நீங்களும் எங்களுடன் இங்கேயே தங்கிவிடுங்கள்.உங்களை எவரிடமும் காட்டிக் கொடுக்காமல்,நாங்கள் காப்பாற்றுகிறோம் என்றார்கள்",அம்மீனவர்கள்.
"உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!இனியும் இங்கு தங்கி இருக்க எனக்கு நேரமில்லை.என்னுடைய
லட்சியங்களை நிறைவேற்றி முடிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்,விடை கொடுங்கள்!" என்றார்.
"அய்யா! உங்களை சென்று வாருங்கள் எனக் கூற எங்கள் மனம் இடம் தரவில்லை...ஆனால் நீங்கள் மீண்டும் எப்போது இங்கே திரும்புவீர்கள் என்பதை மட்டும் கூறிவிட்டுப் போங்கள்.அப்போதும் நாங்கள் வந்து உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்போம்",என்றார்கள்,கண்களில் கண்ணீர் மின்ன...
"என் இந்திய சகோதரர்களே ! நான் மீண்டும் இங்கு வருவதானால் ,சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ய கொடி பட்டொளி வீசிப் பறக்கும் நம் இந்தியக் கப்பலில்தான் நாடு திரும்புவேன்!இது உறுதி!!" எனக் கடல் மணலின் மீது தனது கையினால் அடித்து சபதம் செய்த பிறகு
கடற்கரைப் பக்கமாக விரைந்தான்,அந்த சுதந்திரச் சூரியன்...
அம்மீனவர்களின் கண்களில் கண்ணீர் கடல் நீராகப் பொங்க விடை பெற்ற...
"அந்த செண்பகராமன் தான் யார்?..."
1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 இல் திருவனந்தபுரத்தில் சின்னசாமிப் பிள்ளை,நாகம்மாள் என்ற தம்பதிகளுக்கு பிறந்த மூத்த மகனுக்கு செல்லமாக வைத்த பெயர் தான் வெங்கிட்டன்.அவன் தான் செண்பக ராமன்.
அவனின் தங்கையின் பெயர் பாப்பாத்தி அம்மாள்,தம்பியின் பெயர் சோமசுந்தரம்.
இளமையிலேயே பள்ளியில் எல்லாப் பாடங்களிலும் திறமைசாலியான மாணவன் எனப் பெயரெடுத்தான்.
அவனின் வீட்டுக்கருகிலேயே இருந்த கிருஷ்ணசாமி அய்யர் என்பவர், அந்நாளைய சுதந்திரப் போராட்ட வீரர்களாகிய சத்ரபதி சிவாஜி,ஜான்ஸிராணி,ஹைதர் அலி,திப்புசுல்தான்,ராஜாராம் மோகன்ராய்,கோபாலகிருஷ்ண கோகலே,குரு கோவிந்த்சிங்,லோகமான்ய திலகர் மற்றும் பலருடைய படங்களை மாட்டி வைத்து,விற்பனை செய்வார்.
சிறுவன் செண்பகராமன் அங்கு செல்லும் போதெல்லாம் கிருஷ்ணசாமி அய்யரும்... முழக்கம் உயரும்... _ஆதிசிவம்,சென்னை.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 1
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com