பாகம் 2 "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
அவனுக்கு ஒவ்வொரு படத்திலுள்ளவர் பற்றியும் கதை கதையாகக் கூறுவாராம்.
ஒரு சமயம்,வீதிகளில் ஆங்கிலேயருக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் ஊர்வலமாகச் செல்வதைக் கண்ட செண்பகராமனும்,திடீரென்று தன் வீட்டு வாசல் பக்கமாக வந்த கூட்டத்தினருக்கு ஆதரவாக கைகளை உயர்த்தி உற்சாகத்தோடு கோஷமிட்டான்.
"முதல் முழக்கம்!"
கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் இச்சிறுவனின் துணிச்சலைப் பாராட்டி ,தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி அவனுக்கு அணிவித்தார்.
"எங்கே சொல்லு பார்க்கலாம்!வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே!ஆங்கிலேய ஆட்சி ஒழிக!", என்று சொன்னதையே செண்பகராமனும் திருப்பி அப்படியே சொன்னான்.மகிழ்ச்சி அடைந்த பெரியவர் அவனைக் கொஞ்சிக் கொண்டாடினார்.
வாயில் கோஷத்தோடும்,கழுத்தில் மாலையோடும் வீட்டுக்குள் நுழைந்த மகனின் விபரீதக் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்!,தாய்.
"அய்யோ,மகனே நீ செய்வது ராஜாங்க குற்றம்.உங்க அப்பாவும் அந்த ஆங்கிலேயே சர்க்காரிடம்தான் போலீஸ் உத்தியோகம் பார்த்து வருகிறார்.இப்படி கோஷம் போடுபவர்களைப் பிடித்து ஜெயிலில் தள்ளுவதுதான் அவருடைய வேலையே. நீ இந்த மாதிரி நடந்து கொண்டால் உன்னை ஜெயில் போட்டு, உன் அப்பாவையும் உத்தியோகத்திலிருந்து நீக்கி விடுவார்கள்", என்று அம்மா அழுது புலம்பினாள்.
தான் வழக்கமாக செல்லும் கிருஷ்ணசாமி அய்யரிடம் போய் நடந்தவைகளைக் கூறினான்.
"இது பாரத மாதா படம்.இவளது கைகளிலும் கால்களிலும் தான் ,அந்த வெள்ளையர்கள் அடிமை விலங்குகளைப் போட்டுப் பூட்டி விட்டார்கள்.அந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிவது பாரத மாதாவின் பிள்ளைகளாகிய நம் கடமையில்லையா?" என்றார்.
உணர்ச்சியோடு கோஷமிட்டுக் கொண்டே நண்பர்களின் வீடுகளை நோக்கி ஓடினான்,சிறுவன் செண்பகராமன்.
"சிறுவர்களாகிய நாமும் நம் பாரத தேச விடுதலைக்காகப் பெரியவர்களைப்போல வீதிவீதியாய் கோஷமிட்டுச் செல்ல வேண்டும்.இதனால் என்ன ஆபத்து வந்தாலும்,அதனைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்", என்றான் ஆவேசத்தோடு.நண்பர்களும் சம்மதித்தனர்.செண்பகராமனும் ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் என்பதனை ஏற்படுத்தி அதற்கு தானே தலைவனாகவும் அதில் எல்லா நண்பர்களையும் அங்கத்தினராகச்
சேர்த்தான்.
அன்றொரு நாள் காலை மஹாராஜா ஹைஸ்கூலுக்குச் சென்ற செண்பகராமன் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு...
வகுப்புகள் தொடங்க மணி அடித்தவுடன், "வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே! ஆங்கிலேய ஆட்சி ஒழிக!" என உரத்த குரலில் கோஷமிட்டனர்.
திடுக்கிட்ட தலைமை ஆசிரியர் கையில் நீண்ட பிரம்புடன் தனது அறையிலிருந்து வெளிவந்தார்.
தலைமை ஆசிரியருக்குப் பயந்து சில மாணவர்கள் மட்டும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்கள்.
"செண்பகராமா! இந்த வீண் கோஷங்களால் உங்களுக்கு கெடுதல்கள் நேருவதுடன்,நம்பள்ளிக்கும் வீண் கெட்ட பெயர் தான் உண்டாகும்.நல்ல பிள்ளையாக வகுப்பறைக்குச் செல்லுங்கள்"என்றார்,தலைமையாசிரியர்.
"அய்யா!நாங்கள் போடும் இக் கோஷங்கள் எங்கள் சுயநலத்திற்காக அல்ல! நாடு விடுதலை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் தான் .இதில் தாங்களும், மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறோம்" என்றான்,கொஞ்சம் கூட பயமில்லாத செண்பகராமன்.
கோபம் அடைந்த தலைமையாசிரியர் எதுவும் சொல்லாமல் தனது அறைக்குத் திரும்பினார்.
திடீரென்று செண்பகராமனின் நண்பர்கள் சிதறி ஓடினார்கள்.
பள்ளி வளாகத்திற்குள் நாலைந்து போலீஸ்காரர்கள் லத்தியுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.
வந்த போலீஸ்காரர்களில் ஒருவர்,செண்பகராமனின் காதை பலமாகப் பிடித்துத் திருகி,தலையை பிடித்து குலுக்கினார்.இரண்டு மூன்று லத்தி அடிகளும் கிடைத்தது. அப்படிச் செய்த போலீஸ்காரர் வேறு யாருமில்லை,செண்பகராமனின் தந்தை தான்!
அந்நாளில் சிறுவர்கள் ஏதேனும் குற்றங்கள் செய்தால்,சிறைப் பள்ளிக்கு அனுப்புவது உண்டு. மற்றும் சிலரை கொண்டுபோய் ஊருக்கு வெளியே நாலைந்து மைல்கள் தூரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் வழக்கம் இருந்தது.
அங்கிருந்து பசி,கால்வலி கஷ்டங்களோடு நடந்தே ஊருக்கு வர வேண்டும்.
அதன்படி போலீசும், செண்பகராமனையும், அவனது நண்பர்களையும் திருவனந்தபுரத்திற்கு வெளியே போய் விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.
பசி கண்ணை மறைத்தது.செண்பகராமனுக்கு ஒரு உத்தி பளிச்சிட்டது.
எல்லோருக்கும் அங்குள்ள ஸ்ரீ பத்மநாப தர்மஸாலா என்ற ஊட்டுப் புறைக்குள் நுழைந்தார்கள்.
"நாங்கள் பள்ளி மாணவர்கள்,நகரை விட்டு வெகுதூரம் நடந்தே வந்துவிட்டோம்,பசிக்கிறது என்றான்",செண்பக ராமன்.நம்பூத்ரிக்கு அந்த மாணவர்கள் மீது இரக்கம் பிறந்தது.
பிறகென்ன? பலமான விருந்து தான்!
மாலைப் பொழுதாகி விட்டது,இருட்டுவதற்குள் வீட்டுக்கு எப்படி நடந்து செல்வது?
அந்த சமயத்தில் தான் ஒரு கோச்சு வண்டியிலிருந்து ஒரு போலீஸ்காரர் இறங்கி தனது வீட்டிற்குச் சென்றார்.உடனே செண்பகராமனும் தன் நண்பர்களுடன் அவரிடம் சென்றான்.
"உல்லாசப் பயணம் வந்த வெளியூர் மாணவர்கள் நாங்கள்,வழி தவறி விட்டது.இன்று மாலைக்குள் திருவனந்தபுரத்திலுள்ள தங்களது உல்லாச கோஷ்டியுடன் சேர்ந்து ஊருக்குப் புறப்பட வேண்டும்.இதற்கு நீங்கள் தான் எப்படியாவது உதவி செய்ய வேண்டுமென்று",தங்களது ஊர்,பெயர்களை மாற்றி சரளமான ஆங்கிலத்தில் உருக்கமாகக் கேட்டான்.அவனது பேச்சில் மயங்கிய அந்த போலீஸ் அதிகாரி,தன்னை ஏற்றி வந்த
அதே கோச்சில் வழி தவறிய மாணவர்களை திருவனந்தபுரத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி கோச்சுக்காரனிடம் உத்தரவிட்டார்.
பாதி வழியில் அந்த வண்டிக்காரருக்கு திடீரென ஒரு சந்தேகம்.போலீஸ்காரர்கள் ஊருக்கு வெளியே விடப்பட்ட தண்டனை பெற்ற மாணவர்களோ,இவர்கள்?
திடீரென வண்டியை நிறுத்தி அவர்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்,குதிரை வண்டிக்காரர்.
"உல்லாச பயணமாக திருவனந்த புரத்துக்கு வந்தோம்.நேற்று அந்த போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு வந்தோம்.அவர் எங்களைத் தங்கிப் போகும்படிச் சொன்னார்.இவன்தான் அவருடைய நெருங்கின உறவுக்காரன்.இவனுடைய தகப்பனார் கொல்லத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.அவரும் உங்க போலீஸ் அதிகாரியும் நெருங்கிய நண்பர்கள் ! "என தனது நண்பன் ஒருவனையும் சுட்டிக்காட்டி மிகவும்
நம்பும்படியாகவும் பொருத்தமாகவும் கூறினான்.
வண்டிக்காரருக்கோ சந்தேகம் தீர வில்லை."தம்பிகளா! உங்களை பத்திரமாக நேராக திருவனந்தபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கே அழைத்துச் சென்று அங்கிருக்கும் ஒரு கான்ஸ்டபிளையும் உங்களுக்குத் துணையாக அனுப்பச் சொல்லுகிறேன்", எனக் கூறி குதிரையை தட்டிவிட்டார்.
குதிரை வண்டிக்காரனின் விபரீத பேச்சைக் கேட்டு திடுக்கிட்டாலும்,யாரும் வெளிக்கட்டிக் கொள்ளவில்லை!
போலீஸ் ஸ்டேஷன் வந்ததும் வண்டிக்காரன்,வண்டித் திரையைத் தள்ளிப் பார்த்தான்.
யாருமே இல்லை!
வரும் வழியில் ஊர்வலம் குறுக்கே வந்தததை சாதகமாக்கி தப்பிக்கச் சொன்ன செண்பகராமனின் சமயோசிதயோசனையைப் பற்றி வண்டிக்காரன் அறிந்திருக்க நியாயம் இல்லை.
செண்பகராமன் வீட்டிற்கு திரும்பி வருவதைக் கண்ட அன்னை நாகம்மாள் அவனைப் பரபரப்புடன் அன்புடன் தழுவிக் கட்டிக் கொண்டாள்.தன் அம்மாவிடம் ஏமாற்றி ஊர் வந்த கதை முழுவதையும் சொன்னான். முழக்கம் உயரும்... _ஆதிசிவம்,சென்னை.
அறிவு அழிப்பதற்காக வளர்கிறது.
அன்பு வளர்வதற்காக அழிகிறது. _லாங்பெப்ன.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 2
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com