பாகம் 3 "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய ஏட்டு சின்னசாமி ஒரு மூலையில் தன் மகன் செண்பகராமன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.நாலைந்து அடிகளும் அடித்தார்.அப்பவும் கோபம் தீராமல் தன் இடுப்புத் தோல் பெல்ட்டைக் கழற்றி ஓங்கினார்.அம்மா நாகம்மாள் தடுத்தி நிறுத்தி கணவரை சமாதானப் படுத்தினாள்.
பின்பு தன் மகனை தனியாக அழைத்து "உனக்கு எதுக்குடா இந்த வீண் வம்பு!மற்ற பிள்ளைகளைப் போல ஒழுங்காக நடந்து கொள்ளேன் டா" என்றாள்,அழும் குரலில் அம்மா.
வழக்கம் போல கிருஷ்ணசாமி அய்யரின் வீட்டிற்குச் சென்று முதல் நாள் நடந்த அத்தனை விஷயங்களையும் கூறினான். அவரும் வழக்கம் போல எரிகிற மனசில் எண்ணெயை ஊற்றி சுதந்திரக் கனலை மேலும் ஜ்வாலையுடன் பிரகாசிக்கச் செய்தார்.
அப்போது அவனுக்கு வயது பதினாறு தான்!
பள்ளியில் ஆண்டுகள்தோறும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற செண்பகராமன்,அந்த ஆண்டு தேர்ச்சி அடையவில்லை.
தகப்பனார் மிகுந்த கவலையோடு தனது நண்பர் சரித்திர ஆசிரியர் செரியனிடம் முறையிட்டார்.அந்த ஆசிரியரின் முயற்சியால் அந்த ஆண்டு தேர்ச்சி பெற்றான்.
செண்பகராமன் படிப்பில் காட்டும் அக்கறையைவிட, சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டில் தான் தீவிரமாக இருக்கிறான் என்று ஆசிரியர் செரியன் அவனுடைய அப்பாவிடம் தெரிவித்தார்.
பிரிட்டிஷாருக்கு எதிரியாக மாறினால் தனது மகனின் எதிர்காலமே அல்லவா கேள்விக்குறியாகி விடும் என்று நினைத்த போது அவரை கவலை இருட்டு சூழ்ந்து கொண்டது.
திருவனந்தபுர பகுதிகளில் சர்க்காருக்குச் சேர வேண்டிய வரிகளை வசூலிக்க அதிகாரிகள் தண்டோராக்காரனுடன் கிராமம் கிராமமாகச் சென்றனர்.இதனை அறிந்த செண்பகராமனும் தனது நண்பர்களுடன் அந்த அதிகாரிகளை பின் தொடர்ந்தான்.
வரி செலுத்தாதவர்கள் வீட்டு வாசற் கதவுகள்,கட்டை வண்டிகள்,உழவு மாடுகள்,வீட்டிலுள்ள தானிய மூட்டைகள் மற்றும் இதர சாமான்களையெல்லாம் ஜப்தி செய்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
அம்மக்களின் கண்ணீர்,அழுகைகளை சட்டை செய்ய வில்லை.
இதனையெல்லாம் கண்ட செண்பகராமன் திடீரென அக்கூட்டத்தினுள் புகுந்தான்.
"நாம் இந்தியர்கள் நாம் ஏன் அன்னியர்களுக்கு வரி செலுத்த வேண்டும்?தயவு செய்து இனி வரியைச் செலுத்தாதீர்கள்" என்று முழங்கினான்.
இந்த எதிர்பாராத சூழ்நிலையைக் கண்ட அடிமை அதிகாரிகள் திடுக்கிட்டனர்!
அதிகாரிகள் மேலும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.
அன்று முதல் செண்பகராமனின் உதடுகள் அசைந்தால் எல்லா கிராமங்களுமே அசையும் நிலைக்கு வந்து விட்டது.
ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் செண்பகராமன் பற்றிய,அத்தனை விவரங்களையும் சேகரித்த ரகசியக் குறிப்புகளை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பினார்கள்.
தினமும் கல்லூரியில் செண்பகராமன் பிரின்ஸ்பால் மற்றும் இதர ஆசிரியர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தனது வலக் கையை உயர்த்தி "ஜெய்ஹிந்த!" என்று கோஷமிட்டு மரியாதை செலுத்தினான்.இதர மாணவர்களையும் "ஜெய்ஹிந்த்" என முழங்க முடுக்கி வந்தான்.இந்த கோஷமே நாளாடைவில் கல்லூரி மற்றும் இதர இடங்களிலும் பிரபலமானது!
இந்த ஜெய்ஹிந்த் கோஷம் அந்நாளில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பான சொல்லாக இருந்ததால், கல்லூரி நிர்வாகம் செண்பக ராமனைப் பற்றி அவரது தகப்பனாருக்கும்,கல்வித் துறை மேலதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியது.
செண்பகராமனை தீவிரமாகக் கண்காணியுங்கள்! அவசியம் ஏற்பட்டால் கல்லூரியிலிருந்தே தூக்கும்படி கல்வித் துறை அதிகாரிகளிடமிருந்த பதில் வந்தது.
அந்நாளில் திருவனந்தபுரம் நகரவீதிகளில் அநாகரிகத் தோற்றத்தோடு ஓர் அய்ரோப்பியர் அலைந்து திரிந்தார்.சுமார் 55 வயதான அவர் பெயர் சர் வால்டர் வில்லியம்ஸ் ஸ்டிரிக்லாண்டு.பரட்டைத் தலைமுடி,அதில் எண்ணெய் அழுக்கேறிய தொப்பி,சாயம் வெளுத்த உள்சட்டை, அதனை மறைக்க பித்தான் இல்லாத ஒட்டுத் தையல்கள் போட்ட சுருக்கம் நிறைந்த கோட்டு, கிழிந்த முழுக்கால் நிஜார்,கால்களில்
பாலிஷ் இல்லா பூட்ஸ்,எப்போதும் தோளில் ஒரு தொம்மைப் பை, கையில ஒரு பொத்தல் குடை. அந்த மனிதர் எப்போதும் தனிமையில் திரிந்தார்.
இந்த அபூர்வ மனிதரை அரைப் பைத்திய அய்ரோப்பின் எனக் கேலியாக அழைத்தனர்.
செண்பகராமனும் அவருடைய உயிர் நண்பன் பத்மநாபனும் ஸ்டிரிக்லாண்டு எங்கிருந்தாலும் சந்தித்து வேடிக்கையாகப் பேச்சுக் கொடுப்பதுண்டு.நாளடைவில் இருவருமே அவருக்கு நெருங்கிய நண்பர்களாயினர்.ஒரு நாள் பேச்சுவாக்கில் ஸ்டிரிக்லாண்டு செண்பராமனிடம் எடுத்ததுமே, "தம்பி உனக்கு ஆங்கிலேயர்களைக் கண்டால் பிடிக்காதல்லவா?" எனக் கேட்டது செண்பக ராமனுக்கு வியப்பளித்தது.
"இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?ஆச்சரியமாக இருக்கிறதே" என்றார் பதிலுக்கு.
"செண்பகராமா! இது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது சர்வசாதாரணமான விஷயம்!" என்றார்.
"இது வரையில் எனது பெயரை கூறினதே இல்லையே,உங்களுக்கு எப்படி எனது பெயர் தெரியும்?" என்று மீண்டும் ஆச்சரியப்பட்டான் ,செண்பக ராமன்.
பின்னர் தான் அவர் ஜெர்மனி நாட்டு அந்தரங்க உளவாளி,பெரும் செல்வந்தர்,உயர் கல்வி பயின்றவர்,திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளை கழிப்பவர்.தாவர இயல்,உயிரியல் படிப்பு சம்பந்தமான இயற்கை வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை செண்பகராமன் தெரிந்து கொண்டான்.
ஒருநாள் அந்த பெரியவர் தன் வீட்டுக்கு செண்பகராமனையும், அவனின் நண்பனையும் அழைத்தார். அந்த வீடு ஒட்டடை அடிக்காமல் இருந்தது. அங்கிருந்த நீளவட்ட பெஞ்சில்,கண்ணாடி ஜாடிகளில் ஏராளமான பூச்சிகள்,விஷ ஜந்துக்களை அடைத்து வைத்திருந்தார்.தாவர சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களும்,சில தாவர இலைகளும் தரையெல்லாம் சிதறிக் கிடந்தன.
திடீரென அச்சமயம் அங்கு வீட்டுக்கூரையின் மீது பெரிய எட்டுக்கால் பூச்சி,வலையில் சிக்கிய ஈ ஒன்றின் உடலைத் தன் வாயால் கொத்திக் கவ்வியது.
"இப்போது கண்ட காட்சி பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றார்,பெரியவர்.
"அந்த பெரிய சிலந்தி தான் பிரிட்டிஷ்காரர்கள்.அந்த ஈ தான் பாரத மக்கள்!" என்றான்,செண்பகராமன்.
"சபாஷ்! உன் தேசபக்தி வைராக்கியமாக மாற வேண்டும்" என்று தட்டிக் கொடுத்தார்.
"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
"நான் இன்னும் சில மாதங்களில் ஜெர்மனிக்குத் திரும்புகிறேன்.உனக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வரலாம்.உன் படிப்பைப் பற்றி கவலையே வேண்டாம்" என்றார்,பெரியவர்.
"செண்பகராமா! நான் உன் நண்பனல்லவா? உன்னை விட்டு பிரியமாட்டேன்.உன்னோடு நானும் வருகிறேன் "என்றான்,ராமனின் உயிர் நண்பன்,பத்மநாபன்.
"தம்பி! உன் பெற்றோர்கள் அனுமதித்தால் நிச்சயமாக உன்னையும் அழைத்துச் செல்வேன்",என்றார் பெரியவர்.
குழப்பமான மனநிலையோடு வீட்டுக்குப் போனான்.
மகனின் தீவிர நடவடிக்கையால் அவனுக்கு ஆபத்து வரும்.வேறு எங்காவது வெளியூரிலுள்ள தங்களது உறவினர்களிடம் அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தனர்,ராமனின் பெற்றோர்கள்.
ராமனும் பெற்றோர்களின் மனநிலையை அறிந்தான்.மெல்ல ஜெர்மனிக்குப் போகும் தன் ஆசையை தன் தாயிடம் வெளியிட்டான்.
கடைத் தெருக்களில் அலைந்து திரிந்து... முழக்கம் உயரும்... _ஆதிசிவம்,சென்னை.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 3
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com