பாகம் 3 "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
"ஓணான்,பல்லி, பூச்சிகளைப் பிடித்துத் திரியுமே அந்த அரைப் பைத்தியம் கூடவா,போகப் போகிறாய்?" என்று மிரண்டாள் அம்மா.
அவரை பற்றி தனக்கு தெரிந்த உண்மைகளைச் சொன்னான்,ராமன் தன் அன்னையிடம்.
பேச்சோடு பேச்சாக ராமனின் இந்த விபரீத ஆசையை,அவனின் அப்பாவிடம் பக்குவமாக தெரிவித்தாள்.
திடுக்கிட்ட ராமனின் அப்பா அதட்டிக் கேட்டால் எந்த விவரமும் வெளிவராது என்பதால்,தன் கோபத்தை மறைத்து,உண்மையான அக்கறையோடு விசாரித்த பிறகு...
உடனே தன் உயிர் நண்பன் பள்ளிச் சரித்திர ஆசிரியர் செரியனிடம் போய் நம்பாமல் அந்த அரைப் பைத்தியத்தைப் பற்றி விசாரித்தார்.
"அந்த அய்ரோப்பியரின் நடை உடைகளைப் பார்த்து தப்புக் கணக்குப் போட வேண்டாம். அவர் ஒரு பெரிய படிப்பாளி,விஞ்ஞானி,பேரறிஞர்! உங்கள் மகனை அவர் தன்னுடன் அழைத்துச் செல்வது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை!"என்றார் செரியன்.
மனநிறைவடைந்த சின்னசாமி தன் மகன் ராமனுடன் ஸ்டிரிக்லாந்தைக் காணச் சென்றார்.
கண்ணாடி ஜாடியிலுள்ள ஜீவராசிகளைப் பற்றி குறிப்பெழுதிக் கொண்டிருந்த ஸ்டிரிக்லாந்து நிமிர்ந்தார்.
"அய்யா!, நீங்கள் இங்கு வருவதற்கு முன்,உமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்!" என்று ஸ்டிரிக்லாந்து கேட்டதும் இருவரும் திடுக்கிட்டார்கள்.
"உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும் என்று ஆச்சரியமாக கேட்டார்",ஏட்டு சின்னச்சாமி.
"நீங்கள் குற்றவாளிகளைப் பற்றி எப்படி துப்பறிகிறீர்களோ,அது போல தான் என் தொழில் என்றார்",சிரித்தபடி.
"அப்படி என்றால் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்,சின்னச்சாமி.
"அய்யா! நான் உங்கள் மகனின் ஆப்த நண்பன்!அவன் வருங்காலத்தில் என்னை விட சிறப்பாக வருவான்.அவனை ஓர் உன்னத புருஷனாக உயர்த்திக் காட்டுவேன்,இது உறுதி!" என்றார்
அந்த பேச்சைக் கேட்டு சின்னசாமிக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது!
உடனே உணர்ச்சிவசப்பட்ட சின்னசாமி ஸ்டிரிக்லாந்தின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு "தன் மகனையும்,அவனது எதிர்காலத்தையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றார்,உருக்கமாக.
"அய்யா! இது வரை இவன் உங்கள் மகன்.இந்த நிமிடம் முதல் அவன் என் மகன்.அவனைப் பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.
ஆனால் ஒரு நிபந்தனை...!
உங்கள் மகன் ஜெர்மனிக்கு போகிற விஷயம் சிறிது காலம் வரையில் உமது உறவினர்கள்,வெளிநபர்கள் யாருக்கும் தெரியக் கூடாது" என்றார்,ஸ்டிரிக்லாந்து.
ஏட்டு சின்னசாமியும் "சரி" என்றார்.
"சின்னசாமி! போலீசைக் கண்டுதான் ஜனங்கள் நடுங்குவார்கள்.ஆனால் அதே போலீஸ் உன் மகன் செண்பகராமனை பார்த்தால் நடுங்கிப் போவார்கள்" என்று ராமனின் ஜாதகத்தைப் பார்த்து எப்போதோ சொன்ன,அடிக்கடி வரும் சோதிடரின் வாக்கு ஏனோ ராமனின் அப்பாவிற்கு அப்போதும் வந்தது.
ராமன் பயணத்திற்கு தயாரானான்.அதே சமயம் தன் நண்பனின் குடும்பத்தினரும் பத்மநாபனை ஜெர்மனுக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை கவனித்தனர்.
செண்பகராமனும் பத்மநாபனும் தங்கள் தங்கள் தகப்பனாருடன் திருவனந்த புரம் கடற்கரைக்கு வந்தனர்.
சிறிது நேரத்தில் தன் வழக்கமான அசிங்கமான அநாகரிகத் தோற்றத்தோடு,கையில் பெட்டி படுக்கையுடன்,கிளி ஒன்று அடைக்கப்பட்ட கூண்டையும் கூடவே கொண்டு வந்து சேர்ந்தார்,ஸ்டிரிக்.
"இந்தக் கூண்டுக்கிளியைப் பார்த்ததே இல்லையே?" என்று ஆவலுடன் கேட்டான்,நம் ராமன்.
"வரும் வழியில் இதை வைத்திருந்த முரடன் குச்சியால் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.அதனால் தான் விலை கொடுத்து வாங்கி வந்து விட்டேன்," என்றார்.
"அப்படியானால் இதனை உங்களுடன் ஜெர்மனிக்கு கொண்டு போகப் போகிறீர்களா? இல்லை!" என்று அப்பொழுதே அந்த கிளியை பறக்க விட்டார்.
சுதந்திர வானில் நீச்சல் அடித்தது அந்த கிளி!..
பிரிட்டிஷாரின் கொடுமையிலிருந்து விடுவித்து,தன்னோடு அழைத்து செல்லும் மகிழ்ச்சியை அவனுக்கு உணர்த்த தான், அதை விலைக்கு வாங்கினாராம்,ஸ்டிரிக்.
அந்த வாயில்லா ஜீவனிடம் காட்டிய அன்பைப் பார்த்து தன் மகனும் அவரிடம் பத்திரமாக இருப்பான் என்று மனம் மலர்ந்து போனார்.
கண்ணீரும் அழுகையும் புலம்பலுமாக விடை பெற, அவ்விருவரோடு ஸ்டிரிக்லாந்தையும் சுமந்து கொண்டு புறப்பட்டது, அச்சிறு நீராவிக் கப்பல்...
அக் கப்பல் இலங்கையிலுள்ள கொழும்புக்கு வந்து சேர்ந்தது.
1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 இல் என்.ஜி.யார்க் என்ற ஜெர்மானியக் கப்பல் மூலம் இத்தாலிக்கு வந்தனர்.
செண்பகராமனைக் கேட்டு பக்கத்து கிராமத்தார்களும்,நண்பர்களும் நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.போலீஸ் தான் எங்கேயோ கடத்திப் போய் இருக்கிறது என்று திடீரெனக் கிளம்பிய புரளி போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டது.மேலதிகாரிகளும் செண்பகராமன் காணாததைப் பற்றி புகார் செய்தனர்.
இந்த காணாமல் போன விஷயம் சூறாவளியாய் திருவனந்த புரத்தையே புரட்டியடித்து.
ஒரு வெளிநாட்டு நாடோடியுடன் இரண்டு இந்திய சிறுவர்கள்,அதே நாடோடியுடன் ஜெர்மனிக்குச் செல்லும் கப்பலில் சென்ற விட்டார்கள் என்ற ரகசியக் குறிப்பு வந்ததும், தீவிரமாக துப்புத் துலங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.
விரைவிலேயே அந்த நாடோடி ஸ்டிரிக்லாந்து என்றும், அவருக்கும் செண்பகராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதையும்,அந்த நாடோடி ஜெர்மனி நாட்டு உளவாளி என்பதையும் (நாட்டை விட்டே போன பிறகுதான்) வெற்றிகரமாக கண்டுபிடித்தது!போலீஸ்.
ஸ்டிரிக்லாந்து உளவாளி என்று கேட்டதும் அந்த அரைப் பைத்தியக்காரனை நம்பி மோசம் போனோமே என்று கலங்கிப் போனார்,ராமனின் அப்பா.
போலீஸ் மேலதிகாரிகள்செண்பகராமனைப் பற்றி அவனின் அப்பாவிடம் பகிரங்கமாக விசாரித்தனர்.
"தன் மகனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் ,சில காலமாகவே தனக்கும் அவனுக்கும் பேச்சு வார்த்தைகள்,ஒற்றுமை சீராக இல்லை. அவனைப் பற்றிய தகவல்கள் தனக்கு எதுவுமே தெரியாதென" மவுனம் சாதித்தார்.
இனி மகனை தொடர்பு கொள்ளவே முடியாது .அது ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்ற அதிர்ச்சியான உண்மை செண்பகராமனின் அம்மாவை தாக்க, படுத்த படுக்கையானாள்.மகனின் நினைவாகவே இருந்து 1912 ஆம் ஆண்டு உயிரையும் விட்டாள்.குடும்ப விளக்கு அணைந்ததது.குடும்பமே இருண்டது!
கப்பல் பயணத்தின் போது ஸ்டிரிக்லாந்து தன் அநாகரீகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டார். பெரும் பணக்காரர்கள் அணியும் மேநாட்டு உடைகள்,தலையில் மடிப்புத் தொப்பி இவற்றுடன் படுமிடுக்காகக் காட்சி அளித்தார்.அந்த உருவில் அவரைக் கண்டதுமே செண்பகராமனுக்கு வியப்பாக இருந்தது.எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
அவர்கள் இத்தாலியை அடைந்தனர்.அங்குள்ள நேபிள் நகரிலுள்ள பிரபல பெரிலிஸ்ட் லாங்வேஜ் காலேஜில் புதிய மாணவராகச் சேர்ந்தார்.இக்கல்லூரி பிறநாட்டு மொழிகளை வெகு எளிதில் பயிற்றுவிக்கக் கூடியது.
செண்பக ராமன் புது மாணவன் என்பதால் "பிளாக் கண்டரி ஸ்டூடண்ட்","ப்ளாக் இண்டியன் ஸ்டூடண்ட்" என் கேலி பேசி ராக்கிங் செய்தனர். செண்பகராமனுக்கோ பெரிய அவமானமாக இருந்தது!
அன்றொரு நாள் ஸ்டிரிக்லாந்து வேறு வேலையாக பெரிலிஸ்ட் காலேஜ் பக்கமாகச் செல்ல நேரிட்டது.காலேஜுக்கு வெளியே இருந்த சில மாணவர்கள் ஸ்டிரிக்லாந்தைக் கண்டதும் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்தினார்கள். முழக்கம் உயரும்... _ஆதிசிவம்,சென்னை.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 4
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com