பாகம் 9 " தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை
தன்னைப் பழிப்பவர்களைப் பார்த்து ,இறைவனின் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என அவர் உபதேசித்தார்.
பெரியார் சிலை உடைப்புப் போராட்டத்தை நம் அடிகளார் பகிரங்கமாக கண்டித்து, சிலை உடைப்பிற்கு எதிராக தெய்வீகப் பேரவையை உருவாக்கி,நாடெங்கும் அதன் கிளைகளைப் பரப்பி,தெய்வ பக்தியைப் பெருகச் செய்தார்.
அடிகளாருக்கு எதிராக பெரியார் தொண்டர்களும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பைக் காட்டிக் கொண்டார்கள்.
அதன் பிறகு சென்னியப்ப முதலியார் இல்லத்தில் தங்கியிருந்த பெரியாரை, அடிகளார் நேரில் கண்டு பேசினார்.இருவரும் நெடுநேரம் விவாதித்தனர்.
"உங்களுக்கு மரியாதை செய்ய உங்கள் உருவப் படத்திற்கு எப்படி மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்களோ,அது போலத்தான் சாமி சிலைகளுக்கு நாங்கள் மாலையிடுவது என்பார்",நம் அடிகளார்.
"அதற்காக கோவில் மூலம் பிராமணர்கள் தின்பதை அனுமதிப்பதா?", என்பார் நம் பெரியார்.
சாதி ஒழிப்பும்,இந்தி எதிர்ப்பும் அந்த இருபெரும் சக்திகளையும் ஒன்றாக இணைத்தது.
அதன் பிறகு நாத்திகமும் ஆத்திகமும் ஒரே மேடையில் ஏறிப் பேசிய அதிசயம் நடந்தது!.
அதன் பிறகு ,"தமிழர்களின் தனிப் பெருந்தலைவர் பெரியார் அவர்களே...!",
என பெரியாரை அடிகளார் பாராட்டி அழைக்க...
"மகா சன்னிதானம் அவர்களே...!",
எனப் பெரியாரும் அடிகளாரை மேடையில் மதிப்புடன் அழைப்பார்.(பெரியாரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஒரே சன்னிதானம் நம் அடிகளார் தான்)
ஒரு முறை அடிகளாரின் அழைப்பின் பேரில், பெரியார் குன்றக்குடிக்கு வருகை தந்தார்.அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.அவர் நெற்றில் அடிகளார் விபூதி பூசியதையும் அவர் பவ்வியமாக ஏற்றுக்கொண்டார்.
அது பற்றித் தனது தொண்டர்களிடம் பெரியார் பேசிய போது," நான் எங்கே விபூதி பூசினேன்?...அடிகளார் தான் பூசி விட்டார்.அவ்வளவு தான் அதை அவர் எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதினார்.அந்த நேரத்தில் நான் முகத்தை திருப்பிக் கொண்டால்,அவரை அவமதிப்பதாகிவிடும்...எனவே நான் மறுக்க வில்லை", என்றார்.
அடிகளாரின் சாதி ஒழிப்பும், தமிழ் மொழிப் பற்றும் தி.மு.க தலைவர் அண்ணாவையும் பெரிதும் கவர்ந்தன.
ஒரு தமிழன் மடாதிபதியாகி இருக்கிறார் என்றால்,அதற்காக நாம் பெருமைப்பட வேண்டுமே தவிர,அவரை எதிர்க்கக் கூடாது என்று தி.க தொண்டர்களுக்குப் பெரியார் அறிவுரை வழங்கினார்.
குன்றக்குடியில் மகா சன்னிதானமாக விளங்கும் இளந்துறவி ,சாதி வேற்றுமைகளைச் சாடுவதில் எங்களுடன் ஒன்றுபடுகிறார் என்று அறிஞர் அண்ணாவும் கூட பெருமையுடன் பேசினார்.
1954 இல் காமராஜர் முதல் அமைச்சரான போது பச்சைத் தமிழன் என்று பாராட்டி அவர் ஆட்சிக்கு முழு ஆதரவு தெரிவித்தார்,பெரியார்.
1955 இல் பொழிந்த கடும் மழை காரணமாகப் பெரு வெள்ளம் பொங்கியது.
நிவாரணப் பணிகளை பார்வையிட்டபடி குன்றக்குடிக்குவந்த,காமராஜர் .
ஆதீன மடாலயத்தின்
முன்னால் ஏழை எளிய மக்கள் வரிசையாக நிற்பதையும்,அடிகளார் அவர்களுக்கு அரிசி வழங்குவதையும் கண்டார்.அரசு செய்ய வேண்டிய அரும்பணிகளை அடிகளார் செய்கிறார் என அகமகிழ்ந்தார்.
குன்றக்குடியில் 1965 இல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கு
குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கினார்.
இந்திக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது சட்டத்தை ஏவி விட்டது ,அப்போதைய முதலமைச்சராக இருந்த பகத்வச்சலத்தின் அரசு.
விளைவு?
அடிகளாரும் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் பட்டார்.முடிவில் அடிகளாருக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
1956 இல் காரைக்குடிக்கு அண்ணா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதாக அறிந்து, குன்றக்குடி நீங்கள் வருகை தர வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதினார்,அடிகளார் .
அண்ணா அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.அங்கு நடந்த இரவு விருந்துக்குப் பிறகு, மடாலயத் தோட்டத்தில், மங்கிய நிலவொளியில் அண்ணாவும் அடிகளாரும் நீண்ட நேரம் உரையாடினார்கள்.சாதி ஒழிப்பு,தமிழில் அர்ச்சனை,தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு போன்றவற்றில் இருவரின் கருத்துக்களும் ஒருமித்து இருந்தன.
1967 தேர்தலில் திமுக வென்றது.அறிஞர் அண்ணா முதல் அமைச்சரானார்.பூம்புகாரில் சிலம்பின் நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது,அதற்குக் கால்கோள் விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.விழாவிற்கு நம் அடிகளாரும் அழைக்கப் பட்டார்.
கட்சிக்காரர்கள்,வேண்டியவர்கள், என்ற பாகுபாடின்றி,தமிழ் இலக்கிய விழாவிற்குத் தன்னை அழைத்த அண்ணாவை,அடிகளார் பாராட்டினார்.
அதோடு இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியதற்காக திருப்பத்தூர் கோர்ட்டில் கட்டிய அபராதத் தொகை ரூ 350 அய் திருப்பித் தரவும் உத்தரவிட்டார்,நம் அண்ணா.
1968 இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் "திருக்குறளை" தேசிய நூலாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
பலரும் கூடி வாழ வேண்டுமாயின்,முரண்பாடுகளை மாறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் விரிவு படுத்தாமல் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அடிகளாரின் அமுத வாக்கு.
தமிழக மடாலயங்கள் அனைத்தும் சாதி அடிப்படையில் உருவானவைதான். பேரூர் மடாலயம்,வெள்ளாளக் கவுண்டரின் மடம்,குன்றக்குடி ஆதீன சைவ வேளாளர் மடம்,கோவிலூர் ஆதீன நகரத்தார் மடம்.
காஞ்சி சங்கராச்சாரியார் மடாலயம்,பிராமணர் மடம்,ஸ்ரீ பெரும்புதூர் ஜீயர் மடாலயம்,அய்யங்கார் மடம்.இதில் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடாலயம் மட்டுமே சாதி வேறுபாடுகளைக் கடந்ததாகும்.
இந்த மடாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல்,ஒதுங்கி வாழ்ந்தனர்.அவர்களை எல்லாம் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களை தெய்வீகப் பேரவையின் உறுப்பினராக்கினார்.
அண்ணாவுக்குப் பிறகு தமிழக முதல்வரான கலைஞர் கருணாநிதி, அடிகளாருக்கு 1969 இல் மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி) பதவியை வழங்கினார்.அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இறைவனின் சாட்சியாக என்று உறுதி மொழி கூற வேண்டிய அடிகளார் மனச்சாட்சிப்படி என்று கூறினார்.
கடவுளின் பிரதிநிதியாகத் திகழும் அடிகளார், நாத்திகர்களைப் போல் மனச்சாட்சிப்படி என உறுதிமொழி எடுத்திருக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. _ஆதிசிவம்,சென்னை.
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 9
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com