பாகம் 5"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
"அன்பார்ந்த மாணவ மணிகளே! இக் கல்லூரியில் என் அன்பு வளர்ப்பு மகனும் படிக்கிறான்...
அவனை உங்களுக்குத் தெரியுமா" என சாதாரணமாகத் தான் கேட்டார்.
யாருக்கும் தெரியவில்லை!
"நீங்கள் எல்லோரும் பிளாக் கண்ட்ரி ஸ்டூடண்ட்! பிளாக் இண்டியன் ஸ்டூடண்ட்! என்று கேலி செய்வீர்களே, அந்த மிஸ்டர் செண்பகராமன்தான் என் வளர்ப்பு மகன்!" என்றார்.
எல்லா மாணவர்களும் வெட்கப் பட்டு வேதனையோடு தலை குனிந்தபடி நின்றார்கள்.
மறுநாள் செண்பகராமனின் வருகைக்காக காத்திருந்த மாணவர்கள் அவரைக் கண்டதும் அன்புடன் கைகுலுக்கி வரவேற்றனர்.அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் ஸ்டிரிக்லாந்தின் வளர்ப்பு மகன் என்பதை முதலிலேயே ஏன் தெரிவிக்க வில்லை என்று அன்புடன் கடிந்து கொண்டார்கள்.
அதற்கு பிறகு அய்ரோப்பிய மாணவர்கள் செண்பகராமனிடம் காட்டிய அன்பு அலாதியனது!
1912 ஆம் ஆண்டு ஜீன் மாதம் செண்பகராமன் ஸ்விட்சர்லாந்து ஜூரிச் நகரிலேயே சர்வதேச இந்திய ஆதரவுக்குழு என்ற பெயரில் ஒரு ஸ்தாபனத்தை நிறுவி,"புரோ இந்தியா" என்ற ஓர் ஆங்கிலப் பத்திரிக்கையும் வெளியிட்டார்.
இந்தியர்களை ஆங்கிலேயர்கள் துன்புறுத்தும் அவலத்தை,வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது, இந்தியாவிற்கு வெளியே சிதறிக் கிடக்கும் இந்தியர்களை ஒன்று சேர்ப்பது, இந்தியாவின் சார்பில் குரல் கொடுக்க முன்வரும் வேற்று நாட்டு முன்னணிப் பிரமுகர்களை கவுரவ உறுப்பினராகச் சேர்த்தல் என்பன போன்ற பல காரியங்களில் ஈடுபட்டார்.
செண்பகராமனால் இந்திய விடுதலைக்கான வெளிச்சம் வெளிநாடுகளிலும் ஆதரவாக குவிவதை,எழுவதை பார்த்து வெளிநாட்டவரும் வியந்தனர்!
அடுத்த சில மாதங்களில் ஸ்டிரிக்லாந்து செண்பகராமனை ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்கு கூட்டிச் சென்றார்.அங்குள்ள சர்வகலா சாலையில் சேர்ந்து அரசியல்,பொருளாதாரம், மற்றும் பொறியியல் கல்விகளைப் பயில ஏற்பாடுகள் செய்தார்.
கல்லூரி விடுமுறை நாட்களில் செண்பகராமன் பெர்லின் மற்றும் இதர நகரங்களுக்குச் சென்று இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களின் கொடுமைகளைப் பற்றி பீரங்கியாய் முழங்கி தள்ளினார்.
ஓர் இந்திய மாணவனின் நெருப்புப் பேச்சைப் பற்றி கேள்விபட்ட ,ஜெர்மனியில் இருந்த இந்திய தீவிரவாதிகள் செண்பகராமனைத் தேடி வந்து,நெருங்கிப் பழகி நண்பர்களானார்கள்.
ஜெர்மன் நாட்டில் செண்பகராமன் சந்தித்த இந்திய புரட்சியாளர்களுள் மாடம் காமா அம்மையார் என்பவர் மிகவும் முக்கியமானவர் ஆவார்.
1861 இல் பிறந்த திருமணமான மாடம் காமா அம்மையார் தம் 30 வயது வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை நேரில் கண்டறிந்தவர்.
மாடம் காமா அம்மையார் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலைமையை அறிய லண்டன் மற்றும் அமெரிக்கா,பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸூக்கும் சென்றார்.
ஏற்கனவே பாரிஸில் இருந்த பல இந்தியப் புரட்சியாளர்கள், அம்மையாரின் தீவிர சுதந்திர வேட்கையைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.
இந்திய கல்கத்தாவில் ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டு வந்த "வந்தே மாதரம்" பத்திரிக்கையை,தடை செய்யப் பட்டதை கருத்தில் கொண்டு "வந்தே மாதரம்" என்ற பத்திரிக்கையை ஜெனிவா நகரில் தொடங்கினார்.
பாரீஸில் இந்தியப் புரட்சியாளர்கள் ஏற்படுத்தி அபிநவபாரத் என்ற இயக்கத்தில் மாடம் காமாவும் உறுப்பினராகச் சேர்ந்தார்.அந்த இயக்கத்திற்கென ஒரு கொடியையும் தானே உருவாக்கினார்.
உங்களுக்குத் தெரியுமா?
அந்த மூவண்ணக் கொடிதான் நம் தலைக்கு மேல் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடிக்கு முன்னோ(கொ)டி என்று!
இக்கொடி முதன் முதலாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 இல் கல்கத்தாவிலுள்ள பார்ஸி பகன்ஸ்கொயர் என்ற பூங்காவின் கொடிமரத்தில் ஏற்ப்பட்டதாகச் சிலர் கூறுவர்.இதற்கு முன்பே மாடம் காமா பாரிஸ் நகரிலும் பின்னர் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெரிலினில் நடந்த சர்வதேசப் புரட்சியாளர்கள் மாநாட்டிலும் ஏற்றியதாகவும் கூறுவர்.
இக்கொடியில் மேலே சிவப்பு மத்தியில் மஞ்சள்,கீழே பச்சை நிறமும்,சிவப்பு நிறப்பட்டையில் எட்டு வெண்தாமரைப் பூக்களும்(அல்லி)மஞ்சள் நிறப்பட்டையில் வந்தே மாதரம் என்ற தேவநாகரி எழுத்துக்களும் நீலநிறத்தில் பச்சைப் பட்டையில் இடது பக்கம் வெண்கதிர் வீசும் சூரியனும் வலது பக்கத்தில் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டிருந்தன.
1909 ஆம் ஆண்டு 18 இல் ஜெர்மனியிலுள்ள ஸ்டட்கார்டு என்ற இடத்தில் பலநாட்டு புரட்சி வீரர்கள் சோஷலிஷ்ட் காங்கிரஸ் என்ற மாநாட்டைக் கூட்டினார்.அந்த மாநாட்டில் படபடக்கும் மூவர்ணக்கொடியோடு , பலத்த கோஷம் வானைப் பிளந்து எங்கும் எதிரொலிக்க கம்பீரமாக மேடை ஏறினார்கள்,நம் மாடம் காமா அம்மையார் அவர்கள்.
"வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே!! வீரச் சகோதரர்களே,உங்கள் அனைவரின் முன்பாக அறிமுகப்படுத்தி பறக்க விடும் இந்த மூவண்ணக் கொடிதான், எங்கள் புண்ணிய பாரத தேசத்தின் சுதந்திரக் கொடி! என் பாரத தேசத்து வீரப் புத்திரர்களே!
இதர தேசத்து சகோதரர்களே! இந்தக் கொடிக்கு நீங்கள் எல்லோரும் எழுந்து வீர வணக்கம் செலுத்துங்கள்!" என்றார் வீராவேசத்தோடு.
மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் "வந்தே மாதரம்" என்ற பலத்த கரகோஷத்தோடு அக்கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஒவ்வொரு மாதமும் பாரீஸ் நகரிலிருந்த மாடம் காமா அம்மையார் அனுப்பிய வந்தே "மாதரம்,மதன் தல்வார்" பத்திரிக்கைகள் மற்றும் புரட்சி எண்ணங்களைத் தூண்டும் சிறு சிறு பிரசுரங்கள் இந்தியா, புதுவையிலும் பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்தன.
இந்தியாவுக்கு வெளியே, இந்திய விடுதலை வேட்கை ஜெர்மனி இந்தியர்களிடம் தான் தீவிரமாக பற்றி எரிகிறது என்பதை இந்தியர்கள்,நன்கு அறிந்தனர்.
செண்பகராமனும், மாடம் காமா அம்மையாரும் ஏற்கனவே ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு
அறிந்து வைத்திருந்தார்கள்.
விரைவிலேயே பெர்லினில் ஒரு கூட்டத்தில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அம்மையார் செண்பகராமனிடம் தனது அன்பையும்,ஆசியையும் கூறிப் பெரிதும் பாராட்டினார்.மேலும்,இந்தியாவைத் தவிர உலகில் பிற நாடுகளிலும் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் கொடிக் கட்டிப் பறப்பதை விவரித்தார்.
ஜெர்மானியர்களைப் போலவே, இந்தியப் புரட்சியாளர்களில் பெரும்பாலனோர் கெய்ஸர் மீசை மீது மோகங்கொண்டு தாங்களும் அது போலவே வைத்துக் கொள்வார்களாம்.மகாகவி பாரதியாரும் தனது முறுக்கிய மீசையை இது அஞ்சா நெஞ்சன் "கெய்ஸர் மீசை" எனப் பெருமையுடன் கூறி மேலும் முறுக்கிக் காட்டுவாராம்!
அந்நாளில் ஜெர்மனி நாட்டை சர்க்கரவர்த்தி இரண்டாம் கெய்ஸர் தான் ஆட்சி செய்தார்.அந்த கூராக முறுக்கேறிய கறுக்கு மீசைக்கு சொந்தக்கார, கெய்ஸர்!பார்வைக்கு கம்பீரமான போர்வீரனைப் போல இருப்பார்.நல்ல உயரம்.அதற்கேற்ற உடற்கட்டு!
ஜெர்மனிய இந்திய புரட்சியாளர் ஹர்தயாள் கெய்ஸரிடம் நெருங்கி பழகுபவர் என்பதைக் கேள்விப் பட்டு காமா அம்மையார் மூலம் லாலா ஹர்தயாளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்,செண்பகராமன்.
ஒரு நாள் அய்யா நான் ஜெர்மன் சக்கரவர்த்தி கெய்சரை அவசரமாகச் சந்திக்க வேண்டும் என்றார் செண்பகராமன், ஹார்தயாளிடம்.
கெய்ஸர் மாளிகையில் தீவிர கண்காணிப்பு இருக்கும். நிறைய விதிமுறைகள் இருக்கும் அவரை அவ்வளவு எளிதில் சந்திக்க முடியாதே எனத் தயங்கினார்,ஹர்தயாள்.
ஆனாலும் கூட்டிப் போய் அறிமுப்படுத்தினார்.
முழக்கம் உயரும்... _ஆதிசிவம்,சென்னை.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 5
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com