பாகம் 6 "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
"யுவர் ஹானர்! இவர்தான் தங்களிடம் கூறியிருந்த எனது நண்பர் செண்பகராமன் பிள்ளை. புரோ இண்டியா பத்திரிக்கையின் ஆசிரியர்!" என்று அறிமுகப் படுத்தினார்.
செண்பகராமனும் கெய்சர் முன்பு சென்று இந்திய முறையில் சல்யூட் அடித்தார்.கெய்சரும் கையைக் குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் செண்பகராமனைப் பற்றி ஜூரிச்சிலுள்ள ஜெர்மன் கான்ஸலும் இவரைப் பற்றி முழு விவரங்களைத் தெரிவித்தார்.
"வீர இளைஞனே! உங்கள் இந்திய விடுதலை முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்!இந்திய ஆங்கிலேய ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் வெகு விரைவில் வந்தே தீரும்!" என்றார் கெய்சர்.
"மேன்மை தாங்கிய மாமன்னரின் எண்ணம்தான் இந்தியர்களின் எண்ணமும் கூட! ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்ட வேண்டிய காலம் நெருங்கி விட்டது. வெகுவிரைவிலேயே நாங்கள் வெற்றி பெறுவோம்!" என்று செண்பகராமன் உணர்ச்சியோடு கூறிய விதம் மன்னர் கெய்ஸரை மிகவும் கவர்ந்து இழுத்ததாம்!
செண்பகராமனின் தேசப் பற்று, புரட்சிகரமான துணிச்சலானப் பேச்சால் கவரப்பட்ட மன்னர் தனக்கு ஆலோசனைகளைக் கூறுபவராக அமர்த்திக் கொண்டார்.
ஜெர்மனியில் நடைபெறும் எல்லா அரசியல் விழாக்களுக்கும் செண்பகராமனுக்கு சிறப்பு அழைப்புகளும் அளித்தனர்.இதனால் அவருடைய பெயரும் செல்வாக்கும் பெர்லின் மற்றும் இதர இடங்களில் பரவியது.
மன்னர் கெய்சரின் வேண்டுகோளின் படி செண்பகராமன் இராணுவத்தில் ஒரு சாதாரண சோல்ஜராகச் சேர்ந்தார்.ஆனால் செண்பகராமன் ஜெர்மன் நாட்டுக் கடற்படையில் சேர விரும்பினார்.
ஜெர்மன் தனக்கென்று கடற்படையை அதுவரை உருவாக்கி இருக்க வில்லை. 1892 இல் தான் அதற்கான எண்ணம் செயல் வடிவம் பெற்றது.
பிரிட்டிஷாரின் போர்க்கப்பல்களின் விவரங்களை ஜெர்மனி துல்லியமாக அறிந்திருந்தது.ஆனால் பிரிட்டனோ ஜெர்மானியருடைய போர்க் கப்பல்களின் வல்லமையை அறியவில்லை.ஜெர்மனியக் கப்பல்களை பொம்மைக் கப்பல்கள் என்று கேலி பேசின.
ஜெர்மன் அரசோ தங்களது கடற்படை வலிமை வேறு எவருக்கும் தெரியக் கூடாதென்று தங்களுக்குள் ரகசியமாகவே வைத்திருந்தது.
கெய்சர் செண்பகராமனை கடற்படையில் சேர அனுமதித்தார். 1914 மார்ச்சில் செண்பகராமன் ஜெர்மன் கடற்படையின் கமாண்டர்களில் ஒருவரான வான்முல்லர் என்பவரின் கீழ் பணியாற்றத் தொடங்கினார்.தனது பொறி இயல் திறமையினால் வெகு குறுகிய காலத்திற்குள்ளேயே...
ஒரு சிறந்த கேப்டனுக்கு உரிய அத்தனை தகுதிகளையும் தானே வளர்த்துக் கொண்டார்.இதைக் கண்ட வான்முல்லர் செண்பகராமனைத் தனது நேரிடை உதவியாளராக நியமித்துக் கொண்டார்.
1914 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்...!
முதல் உலகப் போர் மூண்டது!அதில் ஜெர்மனியும் பிரிட்டனும் நேருக்கு நேர் கடுமையாக மோதிக் கொண்டன.
முதல் உலகப் போர் முதன்முதலாக மேற்கு அய்ரோப்பாவில் ஆரம்பமாகி அதுவே கொஞ்சம் கொஞ்சமாகக் கிழக்கு நாடுகளிலும் பரவியது.
இந்தியக் கடற்கரைப் பகுதியில் தாக்குதல்களை நடத்த எம்டன் கப்பலுக்கு பிரதம கமாண்டராக வான்முல்லர் பொறுப்பேற்றார்.அவருக்கு துணையாக நம் செண்பகராமனும் களம் இறங்கினார்!
இந்தியாவைத் தாக்க முற்படும்போது ,தன் ஆலோசனைக்கு உட்பட்டே தாக்குதலை தொடுக்க வேண்டும் என்றும் அவசியம் ஏற்பட்டால் எம்டனிலிருந்து தான் மட்டும் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு, மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தார்,செண்பகராமன்.
கடற்படை அதிகாரிகளும் அவர் கேட்ட சிறப்பு அனுமதியை வழங்கினார்கள்.செண்பகராமனை சுமந்து கொண்டு எம்டன் கப்பல் தன் வெற்றிப் பயணத்தை துவங்கியது!
முதலில் சீனக் கடற்பகுதியில் சென்ற மார்க் கோனியா என்ற சரக்குக் கப்பலை வேகமாக துரத்தித் தாக்கி சரணடய வைத்தது. மார்க்கோனியா கப்பலோ எம்டன் கப்பலுக்கு நிலக்கரி சப்ளை செய்யும் கப்பலாக மாறிப் போனது!
எம்டன் கப்பலின் வலிமை தீயாய் எல்லா திசைகளிலும் பரவிக் கொண்டிருந்த சமயம்...
இந்தியாவிற்குள்,சென்னையை குறிவைத்து மிதந்து வந்தது எம்டன் தாக்கிய ஒவ்வொரு குண்டும் செண்பகராமனின் ஆலோசனைப் படியே வீசியெறிப்பட்டது!
பிரிட்டிஷாரின் ராணுவத்தைத் தாக்கி அழிப்பது, ஆயுத கிடங்குகளை குண்டுகள் போட்டு அழிப்பது, அதே சமயத்தில் இந்தியர்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த விதத்திலும் சேதம் விளைவிக்காத பாதுகாப்பான தாக்குதல் என்பதுதான் நம் செண்பகராமனின் உள்நோக்கம்!
ஜெர்மன்- பிரிட்டிஷ் மோதலை இந்திய தீவிரவாதிகள் பெரிதும் வரவேற்று கொண்டாடினார்கள்! ஜெர்மன் நாட்டிலிருந்து ஆயுத உதவிகள் கிடைக்கும். அதைக் கொண்டு ஆங்கிலேயர்களின் கொட்டத்தை அடக்கலாம் என்று சந்தோஷப்பட்டார்கள்.ஜெர்மனும் ஆயுதங்கள் வருகின்றன என இரகசிய கடிதங்களை அனுப்பி வைத்து உற்சாகப்படுத்தியது!
சென்னையில் எம்டன் குண்டு போட்டதைப் பற்றி சிலர் வேடிக்கையான பாடல்களையும் தட்டிவிட்டனர்.
"எம்டன் விட்ட குண்டு...!
எரிந்த டாங்கி ரெண்டு...
விழுந்த பொணம் மூணு...!
அழுத பெண்கள் நாலு...!"
எம்டன் கப்பல் பாண்டிச்சேரி துறைமுகத்துக்கு சுமார் 3 மணிக்கு வந்து சேர்ந்தது.
எம்டன் புதுவைக்கு முன்கூட்டியே வர இருப்பதை இரகசியமாக அறிந்திருந்த வ.வே.சு அய்யர் பாரீஸ் நகரிலிருந்த மாறு வேடத்தில் அவசரமாக புதுவைக்குத் திரும்பினார்.
புதுவையில் இருந்த சுத்தானந்த பாரதி வ.வே.சு அய்யரிடம் ரகசிய ஒற்றராக இருந்தார்.தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,இந்தி,வங்கம்,பிரெஞ்சு,சப்பான் ஆகிய பல மொழிகளை நன்கு அறிந்தவர்.இதனால் வ.வே.சு அய்யர் இவரை புரட்சியின் தூதுவராக நாடெங்கும் அனுப்பி வைப்பார்.
இவரைப்போலவே ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையும் மாறு வேடங்களைப் பூண்டு ஆங்கிலேயரின் திட்டங்களை அறிவதில் திறமைசாலி! ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் என்பரைக் கொன்ற கொலை வழக்கில் தலை மறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளி!இவரும் வ.வே.சு அய்யரின் எண்ணங்களோடு இணைந்து செயல்பட்ட வீரர்.
சுத்தானந்த பாரதியும்,மாடசாமியும் அந்த இருட்டில் எம்டன் வருகைக்காக காத்திருந்தார்கள்.வந்து சேர்ந்ததும் நூலேணியின் உதவியால் கப்பலின் மேல் தளத்தை அடைந்தனர்.அங்கு இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த அந்த உருவம் இவர்களைக் கட்டித் தழுவி அன்புடன் வரவேற்றது!
அந்த உருவம் வேறு யாரும் அல்ல?
"நம் செண்பகராமன் தான்!"
"அந்த வீரத்தமிழன் தன் வீரத் தமிழிலில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராகுங்கள்!" என்று முழங்கிய அத்தனை விவரங்களையும் வ.வே.சு அய்யரிடம் இருவரும் விவரித்தார்கள்.
சென்றது, மறுநாளில் தான் தங்கள் துறைமுகத்துக்கு வந்து போனது எம்டன் கப்பல் என்பதை அறிந்து அதிர்ந்தது,புதுவை அரசு!
எம்டன் போன திசையை மோப்பம் பிடித்து ,அந்த ஒற்றைக் கப்பலை மடக்க மூன்று கப்பல்களை ஏவியது,பிரிட்டிஷ் அரசு.
அதற்குள் காற்றை விட வேகமாக அந்த விஷயம் எம்டனைத் தொட்டது!
உஷாரான எம்டன் இந்தியாவின் மேற்கேயுள்ள அரபிக் கடலில் பிரவேசித்து லட்சத் தீவுகள் வழியே சென்று மறைந்தது!
1914 ஆம் ஆண்டில் எம்டன் கப்பலில் இருந்து இறங்கிய செண்பகராமன் திருவனந்தபுர கடற்கரையில் இறங்கிக் கொண்டார்.
அந்த சமயம் தான் இரண்டு மீனவர்களைச் சந்தித்தார்.உணர்ச்சி ததும்ப பேசிய பிறகு அம்மீனவர்கள் அன்புடன் தந்த ஆகாரத்தை மகிழ்ச்சியோடு உண்டார்.பதிலுக்கு அவரும் தெர்மாஸ் கூஜாக்களை பரிசாக கொடுத்து விடைப் பெற்றார்.
முழக்கம் உயரும்... _ஆதிசிவம்,சென்னை.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 6
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com