

(வலை உலக மேதாவிகள் பெரும்பாலும்,காலையில் எழுந்து தூங்கப் போகும் வரை நடந்த நிகழ்வுகளையே தங்களின் சொந்த வலைத் தளங்களில் எழுதி நம்மையெல்லாம் தினம்,தினம் சாகடித்துக் கொண்டு வருகிறார்கள்.அந்த பதிவுகளை, படிப்பவர்கள் என்ன பயனடைந்து விடுவார்கள் என்று யோசிப்பதில்லை அல்லது யாரும் இங்கே யோசிக்கத் தயாராக இல்லை.இதோ நானும் அப்படிப்பட்ட ஒரு விபரீத முயற்சியில்
களம் இறங்கியிருக்கிறேன். பிறவிப் பயனடையுங்கள்!)
சென்னை.
2009 பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு தினம்.
என் தூக்கம் கலைந்த போது, காலை பத்து மணிக்கு மேலாகியிருந்தது.மின்வெட்டால் மின்விசிறி எப்போழுதோ நின்று போயிருந்தது.
வாழ்க மின்சாரத் துறை!
செய்தித் தாள் வாங்க வேண்டும்.எல்லா தினசரிகளும் இப்படி சிறப்புத் தினங்களில் விற்றுத் தீர்ந்து விடும்.தமிழர்கள் வீட்டு டிவியோடு ஹேப்பி பொங்கல் கொண்டாட போய் விட்டதால்,கடைகள் மூடிக் கிடந்தன.
மார்வாடி,அடகுக் கடைக்காரன் மட்டும் எல்லா இடங்களிலும் கடை திறந்து உட்கார்ந்திருந்தான்.எப்படியாவது ஒரு தமிழனாவது தன் பொண்டாட்டி தாலியை அடகு வைக்க இங்கு வராமலா போய் விடுவான்? என்ற நம்பிக்கையோடு.
எல்லா தமிழ் தினசரிகளும் விற்று விட்டன.ஆனால் தினகரன்,சில ஆங்கில பத்திரிக்கைகள் மட்டும் வியாபாரமாகாமல் இருப்பதாக,இரண்டு கடைகளிலும் ஒரே பதிலைக் கடைக்காரன் சொன்னான்.
தமிழ் தினசரிகளில் "தினகரன்" மலிவு விலை என்றாலும் வாங்க ஆளில்லை!
இதைத்தான் கலைஞரின் மாபெரும் குடும்பம்,தன் சொந்த பேப்பர் என்பதால்,தன் சொந்த "சூரியன் FM" வானொலியில் தமிழ் நாட்டின் நம்பர் ஒன் பேப்பர் "தினகரன்" என்கிற பச்சைப் பொய் விளம்பரத்தை தினமும் வாய் கூசாமல் அளந்து விட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு வழியாக பேப்பர் கிடைத்ததும் வீடு திரும்பினேன்.
வீட்டிலிருந்த கைப்பேசியில் மிஸ்ட் கால் பட்டியலில் அம்மா பெயர் இருந்தது.
அழைத்தேன். "பொங்கல் தீபாவளிக்காவது வீட்டுக்கு வந்து தொலைடா சனியனே! "என்று செல்லமாக விட்ட அர்ச்சனையைக் கேட்க சுகமாக இருந்தது.
வருவதாகச் சொன்னேன்.
இந்த வெட்டி ஆபிசரின் இன்றைய நிகழ்ச்சி?
சென்னையில் வருடந்தோறும் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்குப் போவது என்பது தான்.
போகும் வழியில்,ஒரு ஆட்டோக் காரரிடம்,ஒரு "உயர்வருவாய்" ( வேற்றுக்கிரக? ) சுகவாசி ஒன்று,தன் காரின் பெயிண்ட் போனதுக்காக போக்குவரத்தையே நிறுத்தி,நரம்பு புடைக்க கத்திக் கொண்டிருந்தது.
இந்த வகை "உயர்சாதி" நாய்கள் பெரும்பாலும் உண்மையான வறுமை,விலை உயர்வு, நாட்டு நலன் பற்றி கொஞ்சம் கூட வாய் திறக்காது என்ற உண்மை என் முகத்தில் அறைய நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.
"சங்கமம்" என்ற கிராமக் கலை நிகழ்ச்சியை கலைஞர் பெற்ற கவிதை கனிமொழி சிறைச்சாலையில் நடத்திய நிகழ்ச்சியறிந்து என்ன ஒரு நகைச்சுவை உணர்வு அவருக்கு என்று வியந்து போனேன்!
கலைஞர் ஆட்சியில் நாடே திறந்த வெளி சிறைச்சாலையாக மாறி விட்ட பிறகு...
(சிறைக்கு)உள்ளே-வெளியே நாடகம் எதற்கு?
திருமங்கலம் இடைத் தேர்தலில் கலைஞர் கட்டுப்பாட்டில் இருக்கிற போலீசால் கட்டுப்படுத்த முடியாது என்று துணை ராணுவம் வாக்கு நடக்கும் இடத்தில் முகாம் இட்டச் சென்ற ஒற்றைச் செய்தியே ,அதைச் சொல்லும்!
"சோதிடம்" உன்னைத் தவிர எல்லாவற்றையும் நம்பு என்கிறது.
"தன்னம்பிக்கை"யோ உன் மேல் நம்பிக்கை வை,பிறகு மற்றவர்கள் உன் மேல் நம்பிக்கை வைப்பார்கள் என்கிறது.
இரண்டு எதிர் எதிர் தலைப்புகளில் இருக்கும் புத்தகங்கள் எப்படி சக்கை போடுகின்றன, என்னே தமிழனின் அறிவு என்றும் மெய் மறந்து நின்றேன்.
புத்தக அரங்கினுக்குள் நுழைந்தேன்...
"என் பிள்ளைக்கு தமிழே தெரியாது.அவனால எப்படி இந்த தமிழ் புத்தகத்தப் படிக்க முடியும்? அவன இங்கிலீஷ் மீடியத்தில சேத்திருக்கிறேன். செகண்ட் லாங்வேஜா ஹிந்தி எடுத்துப் படிக்கிறான்" என்று பெருமிதமாகச் சொன்ன,ஒரு தமிழ்த் தாயின் விபரீதப் பேச்சால், நான் தலை நிமிர்ந்தேன்!
"விடுதலைப் புலிகள்" என்ற புத்தகம் புத்தக அரங்கில் தடை செய்யப்பட்டிருக்கிறது.தேவையானால் பதிப்பக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கிழக்குப் பதிப்பகத்திலிருத்து பதில் வந்தது.
இதே கலைஞர் இயக்கத்தை தடை செய்தது(லாடம் கட்டியது)காங்கிரஸ்,அன்று!
அதே காங்கிரஸ் சொல்லி,தடை செய்திருக்கிறது கலைஞர் அரசு, விடுதலைப்புலிகளை,இன்று!
வாழ்க ஜனநாயகம்!
"பாரதியார் கவிதைகள் இங்கிலீஷ்ல கிடைக்குமா? என் மகளுக்கு தமிழே வராது.அதான் இங்கிலீஷ்ல கேக்கிறேன்" என்று ஒரு பொறுப்பான தமிழ் அப்பா கேட்டார்,தமிழில்...
"அப்படியெல்லாம் எங்கேயும் கிடைக்காது "என்று முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி அனுப்பி விட்டார்,கடைக்காரர்.
அம்மாவின் வீட்டுக்குள் நுழையும் போது இரவு ஒன்றுக்கு மேலாகியிருந்து,அம்மாவைத் தவிர எல்லோரும் தூங்கிப் போய் விட்டார்கள்.
வீட்டிலிருந்த நாய் இந்த இரவு நேரத்தில உனக்கு வாலாட்டி எல்லாம் வரவேற்க முடியாது, போடாப் போ! என்பதைப் போல கண்களைத் திறந்து பார்த்து விட்டு,தூக்கத்தைத் தொடர்ந்தது.
"ஊர் உலகத்தில எல்லா பிள்ளைகளும் போல தானே உன்னையும் பாக்க ஆசைப்பட்டேன்,அது தப்பா? நான் செத்தக் கூட நான் நிம்மதியில்லாமத் தான்டா சாவேன்,அதுக்கு நீதான் தான்டா காரணம்" என்று உண்மையாகவே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்,அம்மா.
கேட்டுக்கு கேட்டு சலித்துத்துப் போனதால்,நான் ஒன்றும் குறுக்கிட விரும்ப வில்லை.
இரவு என் அறைக்குத் திரும்பும் போது, இரண்டு மணிக்கு மேல் ஆகியிருந்து.
ஆரம்ப நாட்களில் தனியாக படுத்துக் கொள்ள,கொஞ்சம் வெறுமையாக இருந்தது, பழகப் பழக இப்பொழுதெல்லாம் அது ஒன்றும் பிரச்னையாகத் தெரியவில்லை.
மறுநாள் விடிந்ததும் வாந்தி வந்தது.
"வீட்டுச் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை" என்று பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தேன்.
(குறுங்கதை முற்றும்)




புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கி புத்தகங்கள்
1. மவுனப் பயணி
(பாரதிஜிப்ரானின் கவிதைத் தொகுப்பு,இது)
2.உலக சினிமா பாகம் 2
(செழியன் )
3.கனவைப் போலொரு மரணம்
-அ.வெண்ணிலா
(பரிசுப் பெற்ற கவிதை நூல்)
4.பெரியார் டைரி-2009
5.இயக்குநர்-நடிகர் சேரன்,கவிஞர் அறிவுமதி, தமிழர் தலைவர் கி.வீரமணி
(பெரியார் திடல் ஆடியோ CD),
6. ஓ...பக்கங்கள்..!
ஞாநி
(குமுதம்,ஆனந்தவிகடன் வார இதழ்களில் சமுதாய அவலங்களைச் சாடும் கட்டுரைகள்)
www.gnani.net
7.பாஸிடிவ் பாயிண்ட் 100



