"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Monday, August 18, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 12









பாகம் 12
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

ஆயினும் அடிகளார் போலீஸ் அனுமதியுடன் சமாதான யாத்திரை சென்றார்.கிறிஸ்தவப் பேராயருடன் குன்றக்குடி அடிகளார் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார் என்பதை அறிந்த இந்து முன்னணி வழக்கம் போல இந்துக்களின் துரோகியே திரும்பிப்போ என அடிகளார் சென்ற இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டியது.

அடிகளார் அதைக் கண்டு சற்றும் பின் வாங்க வில்லை.சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பின்...

மெல்ல மெல்ல அமைதி திரும்பியது.

முன்பு அடிகளாரை குறை கூறிய அதே இந்து முன்னணி, அதன் பிறகு அவரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது.

ஒரு சமயம் அடிகளார் தமது ஆதீன ஊழியர்களை அழைத்து," சிவகங்கை மகாராஜா நாளை குடும்பத்துடன் இங்கு வருகை தருகிறார்கள்.எனவே சுமார் நாற்பது பேருக்குத் தேவையான உணவுகளை மிகச் சிறப்பாகத் தயாரிக்க வேண்டும்", என்று வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்ட ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.உற்சாகத்துடனும்,சுறுசுறுப்பாகவும் சிறந்த உணவு வகைகளை அவர்கள் தயாரித்தனர்.மன்னரின் வருகையை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க,அடிகளார் நாற்பது விவசாயக் கூலிகளை அங்கு அழைத்து வந்தார்.

"மகாராஜவிற்குத் தயாரித்த உணவுகளை இவர்களுக்குப் பரிமாறுங்கள்", என உத்தரவிட்டார்.

ஊழியர்கள் அதிர்ச்சியில் திகைத்தனர், "சிவகங்கை மன்னர் வருவதாகச் சொன்னீர்களே,சாமி?", எனக் கேட்டனர்.

"ஆமா...சொன்னேன்...இந்த உழைப்பாளிகளும் நமக்கு மன்னர்கள் தான்.எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதியார் பாடவில்லையா?"

"முதலிலேயே தாங்கள் இப்படிச் சொல்லியிருக்கலாமே, சாமி?"

"சொல்லியிருந்தால் சிறப்பாக உணவு சமைத்திருக்க மாட்டீர்கள்.மன்னருக்கு நாம் விருந்து படைப்பது பெரிய விஷயமல்ல.இந்த ஏழை எளிய தொழிலாளிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு போதும் பார்த்திராத உணவுகளை இப்போதும் நாம் படைக்கிறோமே,இதுதான் சிறப்பு" என்றார்,அடிகளார்.

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வைர விழாவுக்கு அப்போதைய தமிழக ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.அந்த விழா மேடையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு "கவுரவடாக்டர் "பட்டத்தை கவர்னர் வழங்கினார்.

"64 வயது நிறைந்த அடிகளார் சிறந்த புலமையாளர்.தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்.பட்டி மன்றங்களிலும்,வழக்காடு மன்றங்களிலும் தெளிவான சிந்தனையுடன்...பேசும் வல்லவர்.30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.இவர் எழுதிய ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலுக்கு தமிழக அரசு முதற்பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

குன்றக்குடியைச் சூழ்ந்துள்ள சில கிராமங்களை அடிகளார் தத்து எடுத்து,நலிந்த பிரிவினர் உயர்வதற்கு வழி வகுத்தவர்.சுதேசி விஞ்ஞான இயக்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தமிழில் அறிவியலைப் பரப்பி வருகிறார்.16 கல்வி நிலையங்களை நிறுவி,சிறப்பாக அவற்றைச் செயல்படுத்துகிறார்.

தீண்டாமையை ஒழிக்கவும்,இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அல்லும் பகலும் அயராமல் அடிகளார் உழைத்து வருகிறார்."

இவ்வாறு விழா மேடையில் அறிவிக்கப் பட்டது.

13-04-95 வியாழக்கிழமை மாலையில்,குன்றக்குடி மடாலயத்தில் அடிகளாருக்குத் திடீரென மார்பு வலியும்,மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.உடனே அவரைக் காரில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்தனர்.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அடிகளார் சிகிச்சைக்குச் சேர்க்கப் பட்டார்.

குன்றக்குடியிலிருந்து அவரது கார் புறப்படும் முன் மதுரையில் உள்ள மூன்று முக்கிய பிரமுகர்களுக்கு டெலிபோன் மூலம் தகவல் பறந்தது.அந்த மூவரில் ஒருவர் தான் கருணைதாசன்.மாநகராட்சி முன்னாள் உறுப்பினரான அவர்,திருவருள் பேரவையின் மாநில இணைச் செயலாளரும், தமிழ்பாவை மாத இதழின் ஆசிரியரும் ஆவார்.

இரவில் நேரம் கழித்து வந்த கருணைதாசனிடம் குன்றக்குடியிலிருந்து போன் வந்த செய்தி தெரிவிக்கப் பட்டது.உடனே அவர் குன்றக்குடி மடாலயத்திற்கு போன் செய்தார். அந்த நேரத்தில் அந்தப் போனை எடுத்துப் பேச அங்கே யாரும் இல்லை.

மறுநாள் அடிகளார் மீனாட்சி மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப் பட்டு அங்கு விரைந்தார்,கருணைதாசன்.

"நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?", என்று கேட்டார்,அடிகளார்.

"சாமி, மதுரைக்கு வந்திருப்பது எனக்கு எப்படித் தெரியாமல் போகும்?", என்று கருணைதாசனும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.சுமார் அரை மணி நேரம் இருவரும் உரையாடினார்கள்.அப்போது அடிகளார் தெளிவாகவும்,தெம்பாகவும் இருந்தார்.

அடுத்த நாள்...

மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமியோடு, கருணைதாசனும் பார்க்கப் போய் இருந்தார்.

அடிகளாருக்கு தூக்க ஊசி போடப் பட்டிருந்தது.இவர்களைப் பார்த்த அடிகளார் சோகச் சிரிப்புடன் பேசினார்.

அடிகளாரை பரிசோதித்த மருத்துவரிடம் போய் அடிகளாரின் உடல் நலம் பற்றி விசாரித்தபோது...

அதிர்ச்சியான செய்தி தான் கிடைத்தது!

"அடிகளாரின் இதயத்தில் ஒரு வால்வு பொருத்த வேண்டும்.அமெரிக்காவில் தான் இந்த சிகிச்சையைச் சிறப்பாகச் செய்கிறார்கள்", என்றார்,மருத்துவர்.

கவலை முகமாக இருந்த கருணைதாசனின் முகம்,கலவர முகமானது. "டாக்டர் அதிகம் பேச வேண்டாம் என்கிறார்...நாம் திரும்பிப் போவோம்", என்று வாசலில் நின்ற காரில் இருவரும் ஏறியபோது,அடிகளாரின் உதவியாளர் அவசரமாக ஓடி வந்தார்,"சாமி, உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்கள்", என்று கருணைதாசனிடம் தெரிவிக்க மீண்டும் அடிகளாரிடம் விரைந்தார்,கருணைதாசன்.

கட்டிலில் ஒருபுறம் சாய்ந்து படுத்திருந்த அடிகளார்,கருணைதாசனின் கையைப் பற்றி உட்காரச் சொன்னார்."அமெரிக்கா சென்று இதய ஆப்ரேசன்(வால்வு மாற்ற சிகிச்சை)செய்து கொள்ள தீர்மானித்து விட்டேன்.

சென்னை மைலாப்பூரில் உள்ள கற்பக விடுதி(குன்றக்குடி ஆதினத்திற்கு உரியது)யில் என்னை வந்து பாருங்கள். நாம் அமெரிக்காவிற்குப் போவோம்", என்றார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்படுவதற்குத் தேவையான பாஸ்போர்ட்,விசா,விமான டிக்கெட் அனைத்திற்கும் அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலையில் மதுரையிலிருந்து , சென்னைக்குப் புறப்பட்டுச் செல்ல அவரின் உடல்நிலை ஒத்துழைக்க வில்லை.

15 ஆம் தேதி நள்ளிரவுக்கு சற்று முன்னதாக (11-45 மணியளவில்) அடிகளாரின் திணறித் துடித்த இதய துடிப்பு சப்தம் இல்லாமல் நின்று போனது!

தமிழ்நாட்டின் இதயமாக குன்றக்குடியில்துடித்துக் கொண்டிருந்த அந்த இதயம் நின்று போனது...!

மதுரையிலிருந்து வந்த அடிகளாரின் உடல், அந்த நள்ளிரவில் 2-30 மணிக்கு குன்றக்குடியை அடைந்ததும்...

அழுகையும்,ஒப்பாரியும் கூக்குரலும், கதறலும்,ஓலமும் அந்த இரவையும்,திசைகளைக் கிழித்ததுக் கொண்டு, அந்த வானத்தை நோக்கி உயர்ந்தது!

தமிழ் நாட்டின் உயர்வுக்கு மலையாய் எழுந்த அடிகளாரின் முன்னால் ஒட்டு மொத்த தமிழ்நாடே தலை குனிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது...!

சில உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நம் மனம்...

யாராலும் சமாதானம் சொல்ல முடியாத,ஆறுதல் சொல்ல முடியாத சில இழப்புகளை,உண்மைகளை, நம் மனம் ஏற்க மறுக்கிறது...


.....முற்றும்.....

_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 11






பாகம் 11
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



கோவிலைத் தழுவிய குடிகளும்,குடிகளைத் தழுவிய கோவிலும் என்ற கொள்கையைத் தான் அடிகளார் நடைமுறைப் படுத்தினார்.

"கோவிலில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் தரகர்கள்(அர்ச்சகர்கள்,பூசாரிகள்) எதற்கு?பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று,வழிபடும் உரிமையை வழங்கினால், இரட்டை வெற்றி கிடைக்கும் ", என்றார், அறிஞர் அண்ணா.

சிலர் கோவில் நகைகளுக்குப் பாதுகாவல் இல்லாமல் போய் விடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

"ஒரு தாய் தன் மகனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வது வருந்தத்தக்கது, வேதனையானது.

எல்லோரும் கருவறைக்குள் சென்று வழிபடும் போது, தெய்வத்திற்கு நகைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.எனவே யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் பெறுமாறு அரசியல் சட்டத்தைத் திருத்துவதை,நான் வரவேற்கிறேன்", என்று அடிகளார் பேசினார்.

31.05.74 இல் குன்றக்குடி ஆதீனத்தின் அய்ந்து கோயில்கள் சார்பில் திருப்பத்தூரில் பட்டிமன்றம் நடை பெற்றது.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். ஆம் ,இல்லை என்ற தலைப்புகளில் சொற்போர் நடந்தது.அடிகளார் அதன் நடுவராக இருந்தார்.

அடிகளாரின் அய்ம்பதாவது பிறந்த நாளின் போது, "பெரியார் இறந்த பிறகு வந்துள்ள எனது பிறந்த நாள் இது.சமயத்துறையில் நான் பெரியாரின் கொள்கையிலிருந்து மாறுபட்டாலும்,சாதி ஒழிப்பு,தீண்டாமை ஒழிப்பு ஆகிய கொள்கைகளில் எங்கள் இருவருக்கும் ஒற்றுமையுண்டு.

பெரியார் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை நான் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்துவேன்", என்று அடிகளார் பேசினார்.

ஒரு சமயம் அடிகளார் பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றபோது,அங்கு பணியாற்றிய பெண்கள், அவருக்கு மரியாதை தரும் நோக்கத்தில் தங்கள் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றினார்கள்.

உடனே அடிகளார் ,"செருப்பை அணிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் கால் புண்ணாகி விடும் என எச்சரித்தார்.தனக்கு மரியாதை தருவது பெரிதல்ல.கால்களை பாதுகாப்பது தான் முக்கியம்", என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


சுமார் 3000 மக்கள் வாழும் குன்றக்குடி கிராமம் வானம் பார்த்த பூமியாக,வறண்டு கிடந்தது.அங்கிருத்த நிலங்களில் கால் பகுதி கூட சரி வர விவசாயம் செய்யப்பட்டவில்லை.முக்கால் பங்கு நிலம் வீணே கிடந்தது.

அவ்வூர் மக்களில் பெரும் பான்மையோர் விவசாயக் கூலிகள்,வறுமைக் கோட்டின் கீழே மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவர்களை முன்னேறச் செய்வது எப்படி? என அடிகளார் சிந்தித்தார்.

அவர் 1976 அக்டோபர் 2 ஆம் தேதி(காந்தி ஜெயந்தி அன்று) அவ்வூர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசினார்.நாம் எல்லோரும் சேர்ந்து, நம் கிராம முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யலாம்.இந்த மண்ணில் கிடைக்கும் மூலப்பொருட்களையும்,விளைபொருட்களையும் பயன்படுத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கலாம் என அடிகளார் தெரிவித்தார்.

முதலில் குன்றக்குடி கிராம மக்களைப் பற்றிய தகவல்கள் புள்ளி விவரக் கணக்குகள் தயாரிக்கப் பட்டன.ஒவ்வொரு குடும்பத்தினரின் எண்ணிக்கை,வயது வந்த ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,அவர்களின் கல்வித் தகுதி, தொழில்,தகுதி, ஆர்வம்,வீடு,ஆடுமாடுகள்,நிலம் போன்ற சொத்து வசதி,இதர வசதிகள்,கடன்நிலை போன்ற விவரங்கள் தொகுக்கப் பட்டன.

1977 காந்தி ஜெயந்தியன்று அதற்கான குன்றக்குடி திட்டக் குழு உருவானது.

பாலிதீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பனை ஓலை மற்றும் நார்களால் முறம், கூடை, விசிறி,பெட்டி,துடைப்பம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை செய்யும் குடிசைத் தொழில்,முந்திரிக் கொட்டையிலிருந்து பருப்பைப் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை,அந்த பருப்பு நீக்கப் பட்ட தோட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை,பட்டுப் பூச்சி வளர்த்து,பட்டு நூல் எடுக்கும் திட்டம்
என பல திட்டங்களாக விரிவடைந்தது.

1980 ஆம் வருடத்தில் குன்றக்குடியில் இருந்த ஒரே ஒரு கந்து வட்டிக்கடைக்காரரையும் அங்கிருந்து வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.வட்டிக் கடைக்காரர் வெளியேற மறுத்தார்.எனவே அவரிடம் இனிமேல் யாரும் கடன் வாங்கக் கூடாது என்ற திட்டம் இயற்றப் பட்டது.

எனவே கந்து வட்டிக்கடைக்காரர் தானாகவே அங்கிருந்து வெளியேறினார்.

1989 இல் தமிழக முதலைச்சராக கலைஞர் கருணாநிதி மீண்டும் பதவியேற்ற, பிறகு குன்றக்குடியிலும் மதுபானக்கடை திறக்கப் பட்டது.

அடிகளார் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த ஒற்றை மதுக் கடையையும் ஒழித்தார்.


1984 செப்டம்பர் 9 ஆம் தேதியிட்ட இந்து பத்திரிக்கையில் சமூக அடித்தள நிலையில் சில சாதனைகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.குன்றக்குடி கிராமத் திட்டக் குழுவின் சாதனைகள் அதில் விவரிக்கப் பட்டிருந்தன.

அப்போதைய இந்திய பிரதமர் இந்திரகாந்தி அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.அனைத்துக் கிராமங்களுக்கும் நான் விரும்பும் திட்டம் இதுவே என அடிகளாருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.

டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகத்திற்கும் பிரதமர் கடிதம் எழுதினார்.இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அத்துடன் இணைக்கப் பட்டிருந்தது.குன்றக்குடியை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற கிராமங்களிலும் இது போன்ற திட்டங்களைச் செயல் படுத்துமாறு பிரதமர் அதில் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து 1985 பிப்ரவரியில் திட்ட ஆலோசகர் கே.வி.சுந்தரம், ஒரு குழுவினருடன் குன்றக்குடிக்கு வருகை தந்தார். அந்த குழு அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து,குன்றக்குடி திட்டக் குழுவின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட, பிறகு சென்றது.

06-08-1982 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழ் அர்ச்சனை மாநாடு காரைக்குடி பழ. கருப்பையா அவர்களின் முயற்சியால் நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கு நம் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்த மாநாட்டில் தான் மீனாட்சியம்மன் கோவிலில் வடமொழியில் அர்ச்சனை நடத்தப் படும்.தமிழ் அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற விதி இருந்து வந்தது.

அந்த விதி மாற்றி அமைக்கப்பட்து.

இனி தமிழ் மொழியில் அர்ச்சனை நடை பெறும்.வட மொழி அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற புதிய விதி உருவானது.

1991 மே மாதத்தில் அடிகளார் அமெரிக்கா,இங்கிலாந்து,ஜப்பான் முதலிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை முறைகளை கண்டு வந்தார்.

1982 பிப்ரவரி,மார்ச் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் இந்து கிறிஸ்தவ மதக் கலவரம் தீயாய் எரிந்தது.

போலீஸ்,அரசாங்கம்,அரசியல் கட்சிகளாலும் கூட கலவரத்தை அடக்க முடியவில்லை.குன்றக் குடி அடிகளார் அமைதிப் பணிக்கு அங்கு விரைந்தார்.

கலவரப் பூமியில் ஒர் அமைதிப் புறாவாக, ஒர் அமைதிப் புயலாக!...


_ஆதிசிவம்,சென்னை.






Share/Save/Bookmark

ஹைக்கூ-"பொய்ப் பேசி...! "



ஹைக்கூ
பொய்ப் பேசி...!


தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கும்
தொழிற்சாலை இருந்த இடம் தோண்டப் பட்டது
கணினிக் கட்டிடம் எழுப்ப..


அரசியல் வாதிக்கு
மேடையில் தந்த வீரவாள் உண்மை பேசியது
ஊழல் மன்னன் நீ...!


மொபைல் பேசிக்கு
கவிதைத் தமிழ் பெயர் வைத்தது.
பொய்ப் பேசி...!


வீட்டுக்காரரிடம்
விலைவாசி உயர்வு பற்றி பேசுவதைத் தவிர்த்தேன்
வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார் என்று


_ஆதிசிவம்,சென்னை.






Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics