"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Monday, July 28, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 6







பாகம் 6
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



காரைக்குடிக்கு அருகில் இருக்கும் ஊர்கள்தான் பிள்ளையார்பட்டியும், குன்றக்குடியும்.

குன்றக்குடியில் உள்ள சண்முகநாதர் ஆலயம் 900 வருடங்களுக்கு முற்பட்டது.1900 ஆண்டுகளுக்கு முந்திய சமணப் பள்ளியும்,ஏராளமான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.மயில் போன்ற வடிவத்தில் இந்தக் குன்று அமைந்திருப்பதால் , இவ்வூருக்கு மயூரகிரி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது.

1946-இல் பொன்னம்பல தேசிகர் முக்தியடைய ஆறுமுக தேசிகர் 44-ஆவது குரு மகாசன்னிதானமாகப் பட்டம் சூடினார்.அவர் முதியவராக இருந்தால், ஒரு ஆற்றல் மிக்க தம்பிரானை தன் வாரிசாக நியமிக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

1948 ஆம் வருடம் ஆவணி மாதத்தில் குன்றக்குடியில் ஆண்டுதோறும் நடக்கும் ஆதீன குரு பூஜைக்கு வழக்கம்போல எல்லா ஆதீனங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பட்டன.

குரு பூசையில் கலந்து கொள்ள தருமபுர ஆதீனத்தின் பிரதிநிதியாக நம் கந்தசாமி தம்பிரானையும்,வழித்துணையாக சம்பந்த ஓதுவார் என்பவரையும் மாக சன்னிதானம் அனுப்பி வைத்தார்.

குரு பூஜையில் கலந்துகொண்ட நம் கந்தசாமி தம்பிரானின் புன்னைகைப் பூ முகம் குன்றக்குடி மடாலய ஊழியர்களின் மனதைக் கொள்ளையடித்தது.

குரு பூசைக்குப் பிறகு மாலையில் தர்பார் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.தலைமை வகித்த குன்றக்குடி மாகசன்னிதானம் அவர்கள், நம் கந்தசாமி தம்பிரானை வற்புறுத்தி பேச வைத்தார்.

பிறகு என்ன நடக்கும்? சும்மா விடவாரா?பிய்த்து உதறி விட்டார்,நம் கந்தசாமி தம்பிரான்.

பேச்சு நன்றாக இருப்பதாக, மாக சன்னிதானம் பாராட்டி,ஒரு தட்டில் ஆரஞ்சுப் பழங்களும்,பணமும் வைத்து திருக்கை வழக்கம்(அன்பளிப்பு)வழங்கி, தன் அன்பை ,மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.


அதன் பிறகு காரைக்குடி சோமசுந்தரம் பிள்ளை,குன்றக்குடி ஆதீன ஏஜெண்ட் நாராயணசாமி அய்யர் ஆகியோர்களுடன் மகா சன்னிதானம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.வேறு என்ன நம் கந்தசாமி தம்பிரானை தமது வாரிசாக நியமிப்பது என்பது தான்.

பிறகென்ன மற்ற தம்பிரான்களை விட கந்தசாமி தம்பிரானுக்கு உபசாரம் தட புடலாக நடந்தது.அவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்து போகும்படி வற்புறுத்தப்பட்டார்.

அவர்களின் விருப்பப் படி 2 நாட்கள் தங்கி விட்டு, நம் தம்பிரானும்,சம்பந்த ஓதுவாரும் தருமபுரம் திரும்பி வந்தார்கள்.

தருமபுர மடத்தின் அளவிற்கு குன்றக்குடிமடம் செழிப்பானதாக இல்லை.தகர வாளி,தகவரக் குவளை ஆகியவற்றை பயன்படுத்தி வந்ததால்,குன்றக்குடி மடத்தை தகரக் குவளை மடம் என்றே தருமபுர மடாலய ஊழியர்கள் கேலியாகப் பேசினார்கள்.எல்லா நிலைகளையும் சமமாகப் பார்க்கும் நம் தம்பிரான் துறவிகளுக்குள்ளேயுமா பொருளாதார வேறுபாடு? என்று வேதனைப்பட்டார்.

ஒரு நாள் நம் தம்பிரான் அறையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். அறை முன் கார் வந்து நின்றது.அதிலிருந்து திருக்கடவூர் கைலாசம் பிள்ளையும், இன்னொருவரும் தம்பிரானின் அறைக்குள் புகுந்தனர்.

கைலாசம் பிள்ளையுடன் ஏற்கனவே நெருங்கிப் பழகி இருந்ததால் அவர்களிருவரையும் வரவேற்று உட்காரச் சொன்னார்.

என்ன விஷயம் என்று விசாரிப்பதற்குள், "உங்கள் பெட்டியில் உடைகளை எடுத்து வையுங்கள்,இப்போதே நாம் புறப்பட வேண்டும் என்று அவசரப்பட்டார்",கைலாசம்.

ஒன்றும் புரியாத தம்பிரான் ,"என்னை எங்கே அழைக்கிறீர்கள்", எனக் கேட்க...

"அதையெல்லாம் அப்புறம் சொல்லுகிறேன்.முதலில் நீங்கள் எங்களுடன் கிளம்புங்கள்", என்றார்.

"மகா சன்னிதானம் அவர்களிடம் அனுமதிபெற வேண்டும்.."

"வேண்டாம்...வேண்டாம் அனுமதி கேட்டால் காரியமே கெட்டுப் போகும்.
சொல்லிக் கொண்டு போகிற காரியமல்ல இது...முதலில் விஷயத்தை முடித்துக் கொண்டு, பிறகு வந்து சொல்லலாம்", என்றார்.

"விவரம் தெரியாமல் நான் வரமாட்டேன்".

"குன்றக்குடி ஆதீனத்தில் உங்களுக்கு இளவரசு பட்டம் சூட்ட விரும்புகிறார்கள்.விஷயம் தெரிந்தால், உங்களைக் குன்றக்குடிக்கு அனுப்பவே மாட்டார்கள்.ஆகவே பட்டம் பெற்ற பிறகு இங்கே வந்து சொல்லிக் கொள்ளலாம்".

சோரம் போகிற பழக்கம் நம் தம்பிரானுக்கு கிடையாது.அவர்கள் நடந்து கொண்டமுறை எரிச்சலை தந்தது.

"தயவு செய்து போய் வாருங்கள். எனக்கு பட்டமும் வேண்டாம்.ஒன்றும் வேண்டாம்", என்று அவர்களை விரட்டி விட்டார்.

குன்றக்குடி மாக சன்னிதானம் விட்டு விடுவதாக இல்லை.இரண்டாம் முறையும் நம் தம்பிரானுக்கு தூது அனுப்பினார்.

இம்முறை கைலாசம் பிள்ளையுடன்,காரைக்குடி சோம சுந்தரம் பிள்ளையும்,ஆற்றங்கரை முத்தையா முதலியாரும் வந்து சேர்ந்தார்கள்.தம்பிரான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடுவதாக இல்லை.

"மகா சன்னிதானம் உத்தரவு இல்லாமல் வரவே மாட்டேன்", என்று நம் தம்பிரான் அடம்பிடித்தார்.

"சன்னிதானம் உத்தரவு அளித்தால் வருவீர்களா?"

"சரி!"

எனவே அந்த மூவரும் மகா சன்னிதானம் கயிலை குருமணியை அணுகினார்கள்.அவர் நம் தம்பிரானின் கருத்து எதையும் கேட்டு அறியாமலேயே," அனுப்ப இயலாது!", என மறுத்து அனுப்பி விட்டார்.

எனவே திருவாடுதுறை ஆதினத்தில் இருந்த வேறொரு தம்பிரானை குன்றக்குடிக்கு வாரிசுப் பட்டம் சூட்ட அழைத்துச் சென்றனர்.அங்கு மூன்று மாத காலம் வைத்து இருந்தனர்.மகா சன்னிதானத்திற்கு அவரைப் பிடிக்காததால் திருப்பி அனுப்பி விட்டனர்.

அதன் பிறகு மூன்றாம் முறையாக தருமபுரத்திற்குப் படையெடுத்தனர்.இம்முறை குன்றக்குடி தம்பிரான்,கைலாசம்,ஓதுவார் ஆகியோரும் வந்திருந்தனர்.

கைலாசத் தம்பிரான் அதிக வயதானவர்....


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....



_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

தவத்திரு குன்றக்குடி அடிகளார்-அவர்களின் கதை-பாகம் 5








பாகம் 5
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை

சிவ பெருமானின் தவறே என்ற தலைப்பில் வாதிட்ட தம்பிரானின் கருத்தால், "அட! இவன் கடவுளையே குற்றம் சொல்லுகிறானே!" என்று கருதியதால் பழமைக் கருத்தில் ஊறிப் போனர்களிடையே ,இந்தப் பேச்சு சலசலப்பை உண்டாக்கியது.

இந்த பரபரப்புக்குப் பிறகு தருமபுர ஆதீனத்தில் இனி எப்போதும் பட்டிமன்றமே நடத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்ற இந்த சம்பவமே காரணமானது.

சுதந்திர போராட்ட வீரர்கள் என்பதால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகிய தலைவர்களை கடவுளுக்கு அடுத்த வரிசையில் போற்றி வந்தார்.அதனால் காங்கிரசு கட்சி மீது தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு கோரி நம் பச்சைத் தமிழன் காமராஜர் வருவதைக் கேள்விப் பட்டு நம் தம்பிரான் திருக்கோவில் பிரசாதம் வழங்கி வரவேற்றார்.

முன்பெல்லாம் கட்சிகளுக்கு சின்னங்கள் எல்லாம் ஒதுக்கப்பட வில்லை. வண்ண வண்ண வாக்கு பெட்டிகள் தான் வைக்கப் பட்டிருக்கும்.

காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி ஒதுக்கப் பட்டிருந்தது.

திருப்பூர் குமரன்,பகத்சிங்,லாலா லஜபதிராய் போன்ற தியாகிகள் சிந்திய சிவப்புக்கறை, இது. அந்த தியாகிகள் நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள் என்று வித்தியாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் நம் அடிகளாரின் பேச்சை நம் காமராஜர் ஆர்வமாக கவனித்தார்.அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகாலம் வரை (1967 பொதுத் தேர்தல் வரை) காமராஜர் நம் அடிகளாருடன் நெருங்கிப் பழகினார்.


பேரறிஞர் அண்ணா அவர்களின் எதுகை மோனை அடுக்கு மொழி காந்த நடையில் வந்த திராவிட நாடு பத்திரிக்கை நம் அடிகளாரையும் கவர்ந்தது. வாரந்தோறும் ஆவலுடன் வாங்கிப் படிப்பார்.

படிப்பதோடு சும்மா இருப்பதில்லை.அண்ணா எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலுக்கு மறுப்புக் கட்டுரைகள் எழுதவும் தயங்க மாட்டார்.

அரிஜன ஆலய பிரவேசத்தை சேக்கிழார் ஆதரித்தார்.சாதிப் பிரிவுகளை வளர்க்க நினைக்கவில்லை என்று எழுதிய அவரின் கட்டுரை தார்மீக இந்து என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது.அதன் பிறகும் அவர் கட்டுரைகள் அந்த இதழில் அடிக்கடி வெளி வந்தது.

ஒருநாள் திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் அண்ணாத்துரை பேசப் போகிறார் என்பதைக் கேள்விப் பட்டு அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வம் கொண்டார்.

கடவுள் கொள்கையை மறுக்கும் அண்ணாவின் பொதுக் கூட்டத்திற்கு நம் போனால் சிக்கலாகுமே என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

சாயம் போன காவி உடையைத் தேடிப் பிடித்து உடுத்திக் கொண்டு , வை.சு.தண்டபானி என்ற நண்பருடன் சென்று மக்கள் கூட்டம் இல்லா மறுகோடியில் நின்று கொண்டு ஒலிபெருக்கியின் வழியாக அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

அண்ணாவின் உருவம் தெளிவாகத் தெரிய வில்லை. மேடையில் நின்று கையை உயர்த்தி அசைத்தது மட்டும் தெரிந்தது.


தமிழ் ஆர்வம் மிக்க அந்த ஆதீனத்தில்,கந்தசாமி தம்பிரானின் தமிழ்க் கல்வியும் தங்குதடையின்றி தொடர்ந்தது.

தமிழ்க் கல்லூரியில் நம் தம்பிரான் பயின்றபோது,அவரின் ஆசிரியர்களில் ஒருவரான வஜ்ரவேலு முதலியார் அவர்கள் சைவ சமயம் பற்றி இலக்கிய சுவையுடன் பாடம் நடத்தியது, நம் தம்பிரானின் மனதைக் கவர்ந்தது.

ஒருநாள் அந்த ஆசிரியரை நம் தம்பிரான் தன் அறைக்கு அழைத்து வந்து அவருடன் அமர்ந்து உணவருந்திணார்.

கல்லூரியில் ஆசிரியர்தான் உயர்ந்தவர்.ஆனால் திருமடத்தில் ஆசிரியரை விட தம்பிரானே உயர்ந்தவர் என்பதால்.மற்றவர்களுக்குச் சமமாக அமர்ந்து அவர் உணவு உண்ணக் கூடாது.மடாலய ஆசாரப்படி அது குற்றம்.

அதற்கு பரிகாரமாக கந்தசாமி தம்பிரான் பஞ்சகவுமியம் சாப்பிட வேண்டும் என்ற
தண்டனை விதிக்கப்பட்டது.(பால்,மோர்,நெய் ஆகியவற்றுடன் கொஞ்சம் மாட்டு மூத்திரம்,மாட்டுச் சாணமும் கலந்து தயாரிக்கப் படுவது பஞ்ச கவுமியம்)

ஒரு முறை சீகாழி கோவிலில் ஆய்வுப் பணி மேற்கொண்டபோது, ஓர் உட்கோவில் இருப்பதை கண்டார்.அதன் சுவர்களிலும்,கோபுரத்திலும் செடிகளும் கொடிகளும்,ஆசையாக படர்ந்து கிடந்ததன, இது என்ன கோவில் என்று விசாரித்தார்.அந்த கோவிலின் சாவியை வாங்கி திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி!

பசுக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.ஒருபுறம் வைக்கோல் போர்,மறுபுறம் சாணத்தால் ஆன மலை.இன்னொரு மூலையில் ஒன்றுக்கும் உதவாத தட்டுமுட்டுச் சாமான்களின் குவியல்.

பசுக்களை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லியும், அந்த பொருட்களை அப்புறப் படுத்த சொல்லியும்,அந்த ஞானசம்பந்தரின் கோவில் இனி எப்போதும் வழிபாட்டிற்காக திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....


_ஆதிசிவம்,சென்னை.








Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics