"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Wednesday, January 14, 2009

கோபுரக் காதல்-சிறுகதை


அப்பத்தா-சிறுகதை

-பாரதிகிருஷ்ணகுமார்,





அப்பத்தா படுத்தா, வைத்தியம் பாக்கக் கடவுள் தான் வரணும் என்று தாத்தா சொன்னது சரியாகி விடும் போலிருக்கிறது. மகன்கள்,மகள்கள்,பேரன் பேத்திகளும் பால் ஊற்றினால், அடங்குமென்று ஊற்றச் சொன்னார்கள்.




பலனில்லை.


ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாமென்று சுப்பையா டாக்டர் சொல்லி விட்டார்.


தலைமாட்டிலேயே இருந்த தாத்தாவுக்கு கண்ணெல்லாம் சிவந்து,இரண்டு கைகளையும் கூப்பியபடி "கஷ்டப்படாம போயிரணும்" என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தார்.




இந்தக் குடும்பத்துக்கு குத்தகை பார்க்கிற செவனம்மா, அப்பத்தாவை கட்டிலை விட்டு இறக்கி தரையில் போட்டால் ஆறு நாழிகைக்குள் அடங்கி விடும் என்றது.


செல்லூர் சித்தப்பாவுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை. ஜோசியன்,சாமியாடி திருநீறு கலந்த தண்ணீரை மூணு தரம் கொடுக்கச் சொன்னான்.


முட்டைக் கரண்டியில் மூணு கரண்டி நல்லெண்ணெய் கொடுத்தா அடங்கும் என்று யாரோ சொன்னார்கள்.அதுவும் நடந்தது.




விளக்கெண்ண,நல்லெண்ண,வேப்பண்ணெ மூணும் சேத்துக் குளிப்பாட்டுனா ஒரு முடிவு வரும் என்று ஒரு கிழவி சொன்னது.குளிப்பாட்டிய பிறகு அப்பத்தா முகத்து கூடுதல் பொலிவு வந்ததே தவிர, 'எதிர்பார்த்த', வேறு எதும் நடக்க வில்லை.




எது வேணும்னாலும் செய்யுங்க.கண்ண மூடுனா பரவாயில்ல;கஷ்டப்படக் கூடாது என்பது தான் தாத்தா திரும்பத் திரும்பச் சொன்னது.

தாத்தாவின் நினைவு பின்னோக்கிப் போனது...




புருஷனுக்குப் போட்டது போக, மிச்ச மீதி வழக்கம் எல்லாம் அப்பத்தாவுக்கு கிடையாது.அதற்கு நேர் எதிர்.அப்பத்தா சாப்பிட்ட பிறகுதான் தாத்தா சாப்பிடுவார்.இத்தனை வருஷத்தில்,ஒரு வேளை கூடக் கடையில் சாப்பிட்டதில்லை.








அப்பத்தா கண்ணசைத்த பிறகுதான் தாத்தா சாப்பிட உட்காருவர்."ரெண்டும் ரொம்பத்தான் பண்ணிக்குதுங்க" என்று அறிந்தும்,அறியாமலும் மற்றவர்கள் பேசுவதை தாத்தா கூட சமயங்களில் பொருட்படுத்துவார்.அப்பத்தா ஒப்புக் கொள்ளாது.


"கண்டதச் சாப்பிட்டு அரை நாளு அவுக முடியாமப் படுத்தா எவ வந்து பாப்பா" என்று உரக்கச் சொல்லி விடும்.


தாத்தா தலைவலி என்று படுத்தால் கூட ஊரையையே ஊமையாக்கி விடும் அப்பத்தா.




வீட்டுக் கோழிகளுக்கும்,விருந்தாட வரும் காக்கைகளுக்கும்,கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத் தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம்.




ஊறுகாய் ஜாடிக்குள் கை போட்டால் ஊசிப் போகும் என்பது மற்றவர்களுக்குத்தான்.அப்பத்தா எதையும் கையில்தான் எடுக்கும் எந்தப் பண்டமும் ஊசிப் போகாது.காலையில் அம்மியில் அரைத்த தேங்காய்ச் சட்னி,இரவு வரை மணம் மாறாமல் இருக்கும்.எல்லாம் அப்பத்தா கைப் பக்குவம்.


அந்தக் கைகள் குளிர்ந்து போய், வெளுத்துக் கிடந்தன.

கல்யாணமாகி, மூணாவது நாள் இந்த வீட்டுக்கு வந்த அப்பத்தா,திரும்ப ஒரு முறை கூட பொறந்த வீட்டுக்குப் போகவேயில்லை.தன்னைப் பொறந்த வீட்டுக்கு அனுப்பவே வேண்டாமென்று,அப்பத்தா கேட்டுக் கொண்டதை தாத்தா யாருக்கும் சொல்லவே இல்லை. அந்தக் கோபத்தின் பின்னே என்ன இருந்ததென்று யாருக்கும் தெரியாது.


கூடப் பொறந்தவங்க யாரும் கிடையாது,அப்பத்தா, ஒத்தப் பொறப்பு.


அப்பத்தாவுக்குப் பதினைந்து வயசாக இருக்கிற போதே, நெருங்கிய சொந்தமான கண்ணுச்சாமியைப் பேசி முடித்திருக்கிறார்கள்.கண்ணுச்சாமிக்கு படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்பது இரு வீட்டுச் சம்மதம்.கண்ணுச்சாமிக்கு அப்பத்தாவின் மீது தீராத,மாளாத,குறையாத காதல்!


நாலு வருஷத்துக்குள்,ஓஹோவென்றிருந்த கண்ணுச்சாமியின் குடும்பம்,பெரும் பள்ளத்தில் போய் விழுந்து விட்டது.அந்த ஒற்றைக் காரணத்துக்காகவே, அந்தச் சம்பந்தம் வேண்டாமென்று, தாத்தாவைப் பேசி முடித்தார்கள்.




கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருந்த போது,கண்ணுச்சாமியைக் காணோம் என்று ஊரே தேடியது.பழனிக்குப் பாத யாத்திரை போனதாகவும்,கல்யாணத்தன்று அதே முகூர்த்த நேரத்தில் மொட்டை போட்டுக் கொண்டார் என்பதும் தெரிந்த போது, எல்லாம் முடிந்து இரண்டு நாளாகி இருந்தது.இனி ஜன்மத்துக்கும் கல்யாணம் செய்யப் போவதில்லை என்று, ஊரறிய கண்ணுச்சாமி செய்த சத்தியம் அப்பத்தாவை அதிரச் செய்தது.


காசு பணத்துக்காக தாயும்,தகப்பனும் செய்த "படுகொலை" அப்பத்தாவின் ஈரக்குலையைக் கலக்கி விட்டது.. !

பொன்னைத் தேய்த்து ஊற்றச் சொன்னார்கள்.காசித் தண்ணீரைக் கொடுத்தார்கள்.முன்வாசல் மண்,புற வாசல் மண், வயக்காட்டு மண் என்று வித விதமாய் கரைத்து ஊற்றியும் அப்பத்தா அசைந்து கொடுக்க வில்லை.




அப்பத்தாவுக்கு வலிப்பு மாதிரி வந்து வெட்டி வெட்டி இழுத்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது."இந்தக் கண்றாவியக் கண்ணால பாக்காம,நாம முதல்ல போயிரணும்" என்று தாத்தா கதறியதும் எல்லோரும் கலங்கிப் போனார்கள்.


விடியற்காலையில்,வீடு முழுக்கத் தேடியும் தாத்தாவைக் காணோம். கிணறு, குளம்,கம்மாய் என்று ஒரு இடம் விடாமல் தேடினார்கள்.அக்கம் பக்கத்து ஊர்களில் எல்லாம் இளவட்டங்கள் தேடினார்கள்.ஒரு நாள் முழுசாகக் கழிந்தது.




தாத்தா தட்டுப் படவேவில்லை!




தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும்,இடுப்புக் கீழே உள்ள துவாரங்கள் வழி உயிர் பிரிவது பாவமென்றும் சொல்லிக் கொண்டிருந்தது,அத்தை.


தாத்தாவைத் தேடிப் போனவர்கள் எல்லாம் வெறுங்கையோடு திரும்பிக் கொண்டே இருந்தார்கள்.


மறுநாள் பொழுது சாய்ந்த பொழுது,யாரோ தாத்தா வருவதாகச் சொன்னார்கள்.வீடே ஓடி வந்து வாசலில் நின்றது.கூடவே வந்தவருக்கும் தாத்தா வயது தான் இருக்கும்.பிள்ளைகள் எல்லோரும் தாத்தாவைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள்.தாத்தாவும் அழுது கொண்டே இருந்தார்.




குல்லூர் சந்தை விலக்கு ரோட்டில் தாத்தா நின்று கொண்டிருந்ததாகவும்,தற்செயலாகப் பார்த்துப் பேச்சுக் கொடுத்து, விவரம் தெரிந்து அழைத்து வந்ததாகவும் கூட வந்தவர் சொன்னார்.வந்தவர் சொல்லித் தான் தாத்தா அவ்வளவு தூரம் போனது தெரிந்தது.


வந்தவர் வாசலில் இருந்த எல்லோரிடமும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்பத்தா இருந்த அறையில் படுத்துக்கிடந்த தாத்தாவுக்குப் பக்கத்திலேயே போய், அவரும் படுத்துக் கொண்டார்.


காலையில் முத பஸ்ஸுக்கு தான் போக வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.




முத பஸ்ஸுக்கு அரை மணி முன்னதாக,தாத்தாவே வந்தவரைத் தொட்டார்.அவரும் தாத்தாவைப் போலவே தூங்கவில்லை என்பது இருவரின் கண்களில் தெரிந்தது.அவரை, அப்பத்தாவுக்கு அருகில் தாத்தாவே அழைத்துப் போனார்.


இரண்டு கைகளையும் கூப்பியபடி வந்தவர் அப்பத்தாவைப் பார்த்தபடியே நின்றார்.குடிப்பதற்குத் தலை மாட்டில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து,அவர் கையில் கொடுத்து அப்பத்தாவுக்கு ஊற்றச் சொல்லி சைகை காட்டினார்.ஸ்பூனில் தண்ணீரை எடுத்து ஊற்றினார்.தண்ணீர் மணல் தரையில் மறைவது மாதிரி மறைந்தது.இரண்டாவது ஸ்பூன் தண்ணீர் ஊற்றியதும், "புளக்" என்கிற ஓசையுடன் தொண்டைக் குழியிலேயே மோதி தெறித்து வெளியேறியது.


வந்தவர் கொடுத்த தண்ணீர் அப்பாத்தாவின் கடைவாயில் இருந்து வழிந்து, சரிந்து வெளியேறிக் கொண்டிருந்தது...


வந்தவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட தாத்தா ,"என் செல்லமே!" என்று அப்பத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத குரல்,அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த அப்பத்தாவின் மூச்சுக் காற்றோடு சேர்ந்து கலந்தது....






காலடித் தடம் தேய்ந்து மறைய, கலங்கிய கண்களுடன்,முத பஸ்ஸுக்குப் போய்க் கொண்டிருந்தார் தாத்தா தேடிப் பிடித்துக் கூட்டி வந்த...

கண்ணுச்சாமி!



(2008 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் "அப்பத்தா" என்ற தலைப்பில் வெளிவந்த "பாரதிகிருஷ்ணகுமார்" அவர்களின் சிறுகதை,இது)

 



தொடர்புக்கு.... கைப்பேசி : 94442 99656


மின்னஞ்சல்: bkkumar@live.com

http://bharathikrishnakumar.blogspot.com
http://www.bkkumar.co.cc


பாரதிகிருஷ்ணகுமார்,


the roots,
new no 1, old no 19, நாவலர் தெரு,
தேவராஜன் நகர்,
தசரதபுரம்,
சாலிக்கிராமம்,
சென்னை-93
pin: 600093



கதையின் கதை.

இந்த கதையை படித்ததும், கொஞ்சம் ஆடித் தான் போனேன்.இந்த கதையில் வரும் கண்ணுச்சாமியைப் போல ,
இதே காரணத்துக்காக இதே சம்பவம் எனக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டத்தில் நடந்தது  என்பதால்...!


இந்த உண்மை,ஒற்றுமை, என்னைத் தூக்கி வாரிப்போட்டது
உண்மைக்கு ஒரு முகம் தான்.பொய்யுக்குத்தான் பலமுகங்கள்!


இந்த வகையில்,இந்த கதை என்னோடு சம்பந்தப்பட்ட ஒன்றனதால்,எனக்கு பிடித்தமான கதையாகிப் போனது!


பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் இந்த கதை வந்த கதை பற்றிச் சொன்னது.


இந்த கதையில் வரும் தாத்தாவும்,அப்பத்தாவும் எனக்கு நெருக்கமான கதாபாத்திரங்கள்.என் சொந்த தாத்தா பாட்டி.இந்த கதையில் வருகிற கண்ணுச்சாமி என்பவரின் உண்மையான பெயர் நாரயணசாமி!


என் கல்லூரிக் காலத்தில் ஒரு நெசவுத் தொழிலாளியாக இருந்தவர் இந்த நாரயணசாமி!




.எல்லோரின் தறியும் நின்றாலும, அவரின் தறி எப்போதும் நிற்காது,ஓடிக் கொண்டே இருக்கும்.


அவரிடம் தயக்கத்தோடு ஒருநாள் கேட்டேன், "நீங்க ஏன் இன்னும் கல்யாணமே செஞ்சுக்கலைன்னு"




நான் ஒரு பொண்ண காதலிச்சேன்.சந்தர்ப்பவசத்தால, அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டா,


அவ தான் எனக்கு கொடுத்த வாக்க காப்பத்தல.


நான் அவளுக்கு கொடுத்த வாக்க, காப்பாத்திக்கிட்டு இருக்கேன் என்றாராம்,நாரயணசாமி.


அந்த நாரயணசாமி இப்ப உயிரோட இருக்கிறாரா? என்று கேட்டேன.இப்ப அவர் உயிரோட இல்ல என்றார்,பாரதிகிருஷ்ணகுமார்.


உயிர் தறி அறுந்தது!...




இந்த கதைகளில் வரும் சம்பவங்கள்,மனிதர்கள்,இடங்கள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்.இந்த கதையின் உள்ளடக்கம் எங்காவது மூலையில்,எங்காவது ஒரு இடத்தில் நடக்கிற,இன்னும் நடந்து கொண்டிருக்கிற நிஜம் என்று பாரதிகிருஷ்ணகுமார் சொன்ன போது மனசு கனத்துத் தான் போகிறது...




எனக்கு நம்பிக்கை இருக்கிறது...!


மனிதம் செத்துப் போய் விடாது, என்று!


இந்த நம்பிக்கையை இந்த கதை விதைக்கிறது.


அடையாளமாகத் தொங்குகிறது.


உன் கழுத்தில்


நம் காதலை படுகொலை செய்த தூக்குக் கயிறு!


_புதுவை,மா.ஞானசேகரன்


(கைப்பேசி: 98425 79597)









Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics