"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Monday, July 28, 2008

தவத்திரு குன்றக்குடி அடிகளார்-அவர்களின் கதை-பாகம் 5








பாகம் 5
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை

சிவ பெருமானின் தவறே என்ற தலைப்பில் வாதிட்ட தம்பிரானின் கருத்தால், "அட! இவன் கடவுளையே குற்றம் சொல்லுகிறானே!" என்று கருதியதால் பழமைக் கருத்தில் ஊறிப் போனர்களிடையே ,இந்தப் பேச்சு சலசலப்பை உண்டாக்கியது.

இந்த பரபரப்புக்குப் பிறகு தருமபுர ஆதீனத்தில் இனி எப்போதும் பட்டிமன்றமே நடத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்ற இந்த சம்பவமே காரணமானது.

சுதந்திர போராட்ட வீரர்கள் என்பதால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகிய தலைவர்களை கடவுளுக்கு அடுத்த வரிசையில் போற்றி வந்தார்.அதனால் காங்கிரசு கட்சி மீது தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு கோரி நம் பச்சைத் தமிழன் காமராஜர் வருவதைக் கேள்விப் பட்டு நம் தம்பிரான் திருக்கோவில் பிரசாதம் வழங்கி வரவேற்றார்.

முன்பெல்லாம் கட்சிகளுக்கு சின்னங்கள் எல்லாம் ஒதுக்கப்பட வில்லை. வண்ண வண்ண வாக்கு பெட்டிகள் தான் வைக்கப் பட்டிருக்கும்.

காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி ஒதுக்கப் பட்டிருந்தது.

திருப்பூர் குமரன்,பகத்சிங்,லாலா லஜபதிராய் போன்ற தியாகிகள் சிந்திய சிவப்புக்கறை, இது. அந்த தியாகிகள் நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள் என்று வித்தியாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் நம் அடிகளாரின் பேச்சை நம் காமராஜர் ஆர்வமாக கவனித்தார்.அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகாலம் வரை (1967 பொதுத் தேர்தல் வரை) காமராஜர் நம் அடிகளாருடன் நெருங்கிப் பழகினார்.


பேரறிஞர் அண்ணா அவர்களின் எதுகை மோனை அடுக்கு மொழி காந்த நடையில் வந்த திராவிட நாடு பத்திரிக்கை நம் அடிகளாரையும் கவர்ந்தது. வாரந்தோறும் ஆவலுடன் வாங்கிப் படிப்பார்.

படிப்பதோடு சும்மா இருப்பதில்லை.அண்ணா எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலுக்கு மறுப்புக் கட்டுரைகள் எழுதவும் தயங்க மாட்டார்.

அரிஜன ஆலய பிரவேசத்தை சேக்கிழார் ஆதரித்தார்.சாதிப் பிரிவுகளை வளர்க்க நினைக்கவில்லை என்று எழுதிய அவரின் கட்டுரை தார்மீக இந்து என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது.அதன் பிறகும் அவர் கட்டுரைகள் அந்த இதழில் அடிக்கடி வெளி வந்தது.

ஒருநாள் திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் அண்ணாத்துரை பேசப் போகிறார் என்பதைக் கேள்விப் பட்டு அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வம் கொண்டார்.

கடவுள் கொள்கையை மறுக்கும் அண்ணாவின் பொதுக் கூட்டத்திற்கு நம் போனால் சிக்கலாகுமே என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

சாயம் போன காவி உடையைத் தேடிப் பிடித்து உடுத்திக் கொண்டு , வை.சு.தண்டபானி என்ற நண்பருடன் சென்று மக்கள் கூட்டம் இல்லா மறுகோடியில் நின்று கொண்டு ஒலிபெருக்கியின் வழியாக அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

அண்ணாவின் உருவம் தெளிவாகத் தெரிய வில்லை. மேடையில் நின்று கையை உயர்த்தி அசைத்தது மட்டும் தெரிந்தது.


தமிழ் ஆர்வம் மிக்க அந்த ஆதீனத்தில்,கந்தசாமி தம்பிரானின் தமிழ்க் கல்வியும் தங்குதடையின்றி தொடர்ந்தது.

தமிழ்க் கல்லூரியில் நம் தம்பிரான் பயின்றபோது,அவரின் ஆசிரியர்களில் ஒருவரான வஜ்ரவேலு முதலியார் அவர்கள் சைவ சமயம் பற்றி இலக்கிய சுவையுடன் பாடம் நடத்தியது, நம் தம்பிரானின் மனதைக் கவர்ந்தது.

ஒருநாள் அந்த ஆசிரியரை நம் தம்பிரான் தன் அறைக்கு அழைத்து வந்து அவருடன் அமர்ந்து உணவருந்திணார்.

கல்லூரியில் ஆசிரியர்தான் உயர்ந்தவர்.ஆனால் திருமடத்தில் ஆசிரியரை விட தம்பிரானே உயர்ந்தவர் என்பதால்.மற்றவர்களுக்குச் சமமாக அமர்ந்து அவர் உணவு உண்ணக் கூடாது.மடாலய ஆசாரப்படி அது குற்றம்.

அதற்கு பரிகாரமாக கந்தசாமி தம்பிரான் பஞ்சகவுமியம் சாப்பிட வேண்டும் என்ற
தண்டனை விதிக்கப்பட்டது.(பால்,மோர்,நெய் ஆகியவற்றுடன் கொஞ்சம் மாட்டு மூத்திரம்,மாட்டுச் சாணமும் கலந்து தயாரிக்கப் படுவது பஞ்ச கவுமியம்)

ஒரு முறை சீகாழி கோவிலில் ஆய்வுப் பணி மேற்கொண்டபோது, ஓர் உட்கோவில் இருப்பதை கண்டார்.அதன் சுவர்களிலும்,கோபுரத்திலும் செடிகளும் கொடிகளும்,ஆசையாக படர்ந்து கிடந்ததன, இது என்ன கோவில் என்று விசாரித்தார்.அந்த கோவிலின் சாவியை வாங்கி திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி!

பசுக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.ஒருபுறம் வைக்கோல் போர்,மறுபுறம் சாணத்தால் ஆன மலை.இன்னொரு மூலையில் ஒன்றுக்கும் உதவாத தட்டுமுட்டுச் சாமான்களின் குவியல்.

பசுக்களை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லியும், அந்த பொருட்களை அப்புறப் படுத்த சொல்லியும்,அந்த ஞானசம்பந்தரின் கோவில் இனி எப்போதும் வழிபாட்டிற்காக திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....


_ஆதிசிவம்,சென்னை.








Share/Save/Bookmark

Friday, July 25, 2008

தினத்தந்தி முதலிடம் வந்த கதை -பாகம் 2











பாகம் 2

தினத்தந்தி முதலிடம் வந்த கதை



"சேட், உன்னிடம் அடகு வைக்க என்னிடம் எதுவுமில்லை. இருந்ததையெல்லாம் உன்னிடந்தான் அடகு வைத்திருக்கிறேன்.என்னை நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு இன்று நான் ஊதியம் கொடுத்தே ஆக வேண்டும்,இந்த வெள்ளை பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தருகிறேன்.சேட் நீ, இதில் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்.நான் கட்டுப் படுகிறேன்!" என்றார்,ஆதித்தனார்.

அன்றே சம்பளம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு அது மாதிரி சம்பவம் அவர் வாழ்க்கையில் வரவே இல்லை. எல்லாம் வெற்றிமுகம்,ஏறுமுகம் தான்!

ஒரு நாள் நள்ளிரவில் அமெரிக்க சனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட
செய்தி வந்தது.ஏற்கனவே அச்சான பிரதிகள் நிறுத்தப்பட்டு,கென்னடியின் மரணச் செய்தியுடன் பத்திரிக்கை அச்சிடப்பட்டு எல்லா ஊர்களுக்கும் அனுப்பப்பட்டது.

மறுநாள் அந்த செய்தி தினத்தந்தியில் மட்டுமே இடம் பெற்றிருந்து.எந்த ஆங்கில,தமிழ் தினசரியிலும் அச்செய்தி பிரசுரமாகவில்லை!

அதைப் போலவே நேருவுக்குப் பிறகு பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் மரணச் செய்தி,இரவு 3 மணிக்கு வந்தது.இச்செய்தி தினத்தந்தியில் மட்டுமே முதல் பக்கம் எட்டுப் பத்தி செய்தியாக வெளி வந்தது.பெரும்பாலன பத்திரிக்கைகள் தவற விட்டன.சில பத்திரிக்கைகள் மட்டும் கடைசி செய்தியாக சிறிய அளவில் பிரசுரித்தன.

கென்னடி சுட்டுக் கொன்ற செய்தியை படித்து விட்டு, "இந்த செய்தியை ஏன் இரவிலேயே எனக்கு சொல்ல வில்லை?", என்றார்.

"அய்யா, அந்த செய்தி இரவு 2 மணிக்குத் தான் எங்களுக்கே கிடைத்தது. உங்கள்
தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று தான் சொல்ல வில்லை", என்றார்,ஊழியர்.

"தூங்குகிறவன் பத்திரிக்கையாளன் அல்ல. இதை எழுதி கண்ணில் படும்படி,மேசை மீது ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்" , என்றார்,ஆதித்தனார்.குமுறும் எரிமலையாய்...



ஒரு முறை ஒரு கிராமத்து தந்தி ஏஜெண்டு ஆபிசுக்கு வந்திருந்தார்.அந்த விற்பனைப் பிரிவு குமாஸ்தா அவரை நிற்க வைத்தபடி பேசிக் கொண்டிருப்பதை ,தற்செயலாக தனது அறையில் இருந்து வந்த அய்யா,இதை பார்த்து விட்டார்.

உடனே அந்த ஏஜெண்டை தன் அறைக்கு அழைத்து, நாற்காலியில் உட்காரச் சொன்னார்
.பின்னர் விற்பனைப் பிரிவு குமாஸ்தாவைக் கூப்பிட்டு, "இவர் விற்றுக் கொடுக்கும் காசில் இருந்து தான் நமது பத்திரிக்கை நடக்கிறது.அதில் தான் உங்கள் சம்பளமும் அடங்குகிறது", என்றார்.

அந்த குமாஸ்தா ,தன் நடத்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

2 ஆவது உலகப் போர் நடந்த சமயம்.

"ரஷியா,ஜெர்மனி,இங்கிலாந்து என்று தினமும் செய்தி போடுறீங்க.அவை எங்கே இருக்கு? ", என்று ஆதித்தனார்,அய்யா கேட்டார்.

"இந்தியாவுக்கு மேற்கே", என்று தயக்கமாக பதில் வந்தது.

"சரி,அந்த நாடுகள் எங்கே இருக்குன்னு சாதாரண மக்களுக்கு புரியுமா,வாட்ச்மேன் கிட்டே முதலில் கேட்டு வாங்க", என்றார்,அய்யா.

"வாட்ச்மேன் தெரியவில்லை", என்று சொல்லி விட்டார்.

"பார்த்தீங்களா!யாருக்கும் புரியல.எந்த நாடு இந்தியாவுக்கு எந்தப் பக்கம் இருக்கு,எத்தனை மைல் தூரம்ன்னு எழுதி மேப் போடுங்க" ,என்றார்,அய்யா.

அடுத்த நாள் தந்தியின் விற்பனை இரண்டு மடங்கானது!

கென்னடி சுட்டுக் கொல்லப் பட்டார் என்று செய்தியை படித்த பிறகு அந்த ஆசிரியரை கூப்பிட்டு ,"சுட்டுக் கொல்லப் பட்டார் என்று தலைப்பை நீட்டி முழங்கக் கூடாது! சுட்டுக் கொலை! என்று தான் இருக்க வேண்டும்.இதற்குத் தான் அழுத்தம் அதிகம்!உச்சந்தலையில் ஓங்கி அடித்தது போலிருக்கும்!எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!", என்றார்,அய்யா.

கணேசன் என்பவர் தினத்தந்தி,கார்டூனில் சென்னை லைட் ஹவுசைக் காட்ட வேண்டியிருந்தது.

லைட் ஹவுஸ் படம் சரியாக இல்லை என்று தோன்றியது.ஆனால் அதை அப்படி மாற்று,இதை இப்படி மாற்று என்று சொல்ல வில்லை.

பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து "நேராகப் பாரீஸ் கார்னர் போய்,லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வாருங்கள்", என்றார்.

சித்திரக்காரர் தயங்கினார்.

"போய்ப் பார்த்துவிட்டு வாங்க,ஊம் போங்க என்று கண்டிப்புடன்", கூறினார்,ஆதித்தனார்.

கணேசன் லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வந்து தத்ரூமாக வரைந்தார்.பிறகே அதைப் பிரசுரம் செய்தார்,ஆதித்தனார்.



இந்தியாவிலேயே தமிழ் பத்திரிக்கைகள் தான் அதிகம் விற்பனையாகின்றன.இதற்குக் காரணம்,பேச்சு வழக்கில் உள்ள மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.இதற்கு வழிகாட்டியது தினத்தந்தி என்றார்,ஒரு முறை, பண்டித நேரு.

தினத்தந்தி அலுவலகத்தில் காவல்காரராக இருந்தவர்,"ஆத்தி", தினத்தந்தி வாசகர் என்பதற்கு அன்று அளவு கோலாக இருந்தவர் இந்த ஆத்தி தான்.

ஒரு முறை திருப்பதி லட்டு விலை உயர்ந்த போது,"திருப்பதி இலட்டு விலை உயர்வு" என்று அ.மா.சாமி என்பவர் இலக்கணச் சுத்தமாகச் செய்தியை எழுதியிருந்தார்.இதழ் அச்சாகி வந்து,அதைப் பார்த்த ஆதித்தனார்,ஆத்தியை அழைத்தார்.இந்த செய்தியைப் படிப்பா என்றார்.

ஆத்தி எழுத்துக் கூட்டிச் செய்தியைப் படித்தார்."தி...ரு...ப்...ப...தி... திருப்பதி, இ...ல...ட்...டு...ஈலட்டு", என்று படித்த போது,ஆதித்தனார் குறுக்கிட்டார்."அது என்னப்பா ஈ லட்டு?", என்று கேட்டார். "ஈ மொய்த்த லட்டு போல் இருக்கிறது, அய்யா!", என்று ஆத்தி சொல்ல, ஆதித்தனார் உட்பட செய்தி அறையிலிருந்த அத்தனை பேரும் "கொல்" என்று சிரித்து விட்டார்கள்.

பிறகென்ன,ஈ மொய்க்காத செய்தி வெளியானது.

ஆதித்தனார் அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் முடிந்ததும் சிறுவர்,சிறுமியர்கள் ஆட்டோ கிராப்பில், கையெழுத்து வாங்க நிற்பார்கள்.அவர்களிடம் ,"தம்பி நீ யார்?", என்று அய்யா கேட்பார்."நான் தமிழன்!", என்று கூறினால்தான் அவனுக்கு கையெழுத்தே கிடைக்கும்.இப்படி சிறுவர்,சிறுமியர்களிடையே தமிழன் என்ற உணர்வை ஊட்டி வளர்த்தவர்,நம் அய்யா ஆதித்தனார்.

ஒரு முறை ஆதித்தனார் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.உதவியாளர் வெரி அர்ஜெண்ட் என்று போட்டிருந்த தபாலை இரண்டு முறை எடுத்து அய்யா பார்வையில் படும்படி எடுத்து நீட்டினார்.

அந்த எழுத்துக்களை உற்றுப் பார்த்துவிட்டு ,"இதை நீ எழுதினாயா?",என்றார்.

"இல்லையே", என்று திகைத்தார்,உதவியாளர்.

"நான் எழுதினேனா?", என்று கேட்டார்.

"இல்லையே", என்றார்,மறுபடியும்.

"வெரி அர்ஜெண்ட் என்று நீயும் எழுதவில்லை,நானும் எழுத வில்லை.இது அவனுக்கு வெரி அர்ஜெண்ட்.அவன் எழுதியிருக்கிறான்.நமக்கு எது அர்ஜெண்டோ அதைக் கவனி", என்றார்,அய்யா.



1981 இல் மே 24 நாளில் அய்யா ஆதித்தனார் அவர்கள் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

இது வரை தினத்தந்தி ஆபாசம் என்ற சொல்லுக்கு ஆளானது இல்லை.

ஆதித்தனார் வெறும் பத்திரிக்கையாளர் மட்டுந்தான் என்று யாரும் தயவு செய்து நினைத்து விட வேண்டாம்.

தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்.நம் உரிமையை,நாம் ஏன் மத்திய (டெல்லி)அரசிடம் பிச்சையாக கேட்க வேண்டும்? என்று மேடைகளில் முழங்கியது மட்டும் அல்லாமல், பெரியார்,காமராசர்,அண்ணா,ஜீவா மாதிரி தலைவர்களோடும் சிறைக்குச் சென்றவர்.

வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் தோன்றியதில்லை,தினத்தந்தி!இன்று வரை தமிழுக்கு எதிராக,தமிழ் இனத்துக்கு எதிராக,தமிழ் மக்களுக்குஎதிரானஎந்த செய்தியையும்
வெளியிட்டதில்லை.






தமிழ் உயர..

தமிழ்நாடு உயரும்...!

தமிழ்நாடு உயர்ந்தால்..?

நாம் உயர்வோம்....!


இந்த செய்தியைத் தான்,

நாம் வீட்டு வாசல்கள் தோறும் வந்து

தினம் தினம்

சொல்லாமல்.....
சொல்லிச் செல்கிறது...

....தினத்தந்தி.....!


_ஆதிசிவம்,சென்னை.













Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics